'ஸ்டார்ட்அப்' நிறுவனர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி; சென்னை மெட்ரோ பயணத்தில் நடந்தது இதுதான்!

11



சென்னை: சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணித்தபோது பிரதமர் மோடியிடம், புத்தொழில் முனைவோர்கள் தங்களின் யோசனைகளை தெரிவித்துள்ளனர்.

அக்.11ம் தேதி சென்னை வந்திருந்த பிரதமர் மோடி, போரூர் - பூந்தமல்லி மெட்ரோ ரயில் பயணத்தை தொடங்கி வைத்தார்.அதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரயிலில் அவர் பயணம் மேற்கொண்டார். பிரதமர் மோடியுடன், முதல்வர் விஜயும் பயணித்தார். பயணத்தின் போது, 15க்கும் மேற்பட்ட முன்னணி புத்தொழில் முனைவோர்கள், பிரதமர் மோடியை சந்தித்து உள்ளனர். சந்திப்பின் போது, தமிழகத்தில் தொடங்கப்பட வேண்டிய தொழில் முயற்சிகள் குறித்து அவரிடம் விளக்கி இருக்கின்றனர்.

சந்திப்பு குறித்து புத்தொழில் நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரி விக்னேஷ் கந்தசாமி என்பவர் கூறுகையில், ' எங்களின் நிறுவனத்தின் வழியாக, செயற்கை கோள் அடிப்படையிலான மதிப்பீடுகள் மூலம் கட்டுமான பணிகள், அதன் முன்னேற்றம், அபாயங்கள் உள்ளிட்டவற்றை எவ்வாறு கண்காணிக்க முடியும் என்பதை விளக்கி கூறினோம். அப்போது, சாலைகள், பாலங்களை இதன் உதவியுடன் கண்காணிக்க முடியுமா என்று எங்களிடம் பிரதமர் கேட்டார். நாங்களும் முடியும் என்று கூறியிருக்கிறோம். சதுப்புநில காடுகள் பற்றிய எங்களின் மதிப்பீடுகள், ஏரிகள் கண்காணிப்பு தொடர்பாக தமிழக அரசுடன் நாங்கள் செய்துகொண்ட பணிகள் குறித்து விரிவாக பேசியிருக்கிறோம்" என்றார்.

மற்றொரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சசீந்தர் மாரிமுத்து என்பவர் கூறுகையில், " நம் நாட்டின் விமான போக்குவரத்தின் சூழலை மாற்றி அதனை மேலும் வலுப்படுத்துதல், உள்நாட்டில் அதன் பங்கு குறித்து பேசினோம்" என்றார்.

பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து பேசிய மற்றாரு பிரபல நிறுவன இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ரமேஷ் குமார், " ஜூலை மாதம் எங்களின் நிறுவனத்தின் விக்ரம் 1 ராக்கெட் மூலம் நானோ செயற்கை கோளை புவியுடன் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தினோம். பிரேசிலில் இருந்து தென்கொரிய ராக்கெட்டை பயன்படுத்தி, சுற்றுப்பாதையில் ஏவ முயற்சித்துள்ளோம். அந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அதன் விவரங்களை பிரதமரிடம் காட்டினோம்" என்றார்.

புத்தொழில் முனைவோர்களின் கருத்துகள், ஆலோசனைகளை கூர்ந்து கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, வளர்ந்து வரும் விண்வெளித்துறை போன்ற பல துறைகளுக்கு மத்திய அரசு என்றுமே ஆதரவளிக்கும் என்று உறுதியளித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, பிரதமரிடம் பேசுவதற்கு ஒவ்வொரு புத்தொழில் நிறுவனத்தின் நிர்வாகிக்கும் நேரம் ஒதுக்கீடு செய்திருந்தனர். அதன்படி அவர்கள் திட்டங்களை பிரதமர் மோடி, கூர்ந்து கவனித்து கேட்டுக்கொண்டார். அவர்களிடம் திட்டம் பற்றிய ஆலோசனைகளையும் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement