ரூ.3,927 கோடி மதிப்பிலான பணிகள் ஊரக வளர்ச்சி துறையில் அனுமதி

சென்னை: ஊரக வளர்ச்சி துறை சார்பாக, சட்டசபையில் அறிவிக்கப்பட்ட, 14 புதிய திட்டங்களை, 3,927 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த, அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில், ஊரக வளர்ச்சி துறை சார்பில், 31 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், 14 அறிவிப்புகளை செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிராமங்களில் பசுமையை அதிகரிக்க, 1,000 கோடி ரூபாயில், 2 கோடி மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதற்காக தலா, 10,000 மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் திறன் உடைய, 250 புதிய நாற்றங்கால்கள், 35 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளன.

‘எல் நினோ’ எனப்படும், பருவநிலை மாற்றத்தை கருத்தில் வைத்து, கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் பாதுகாப்பு, நீர் சேமிப்பு கட்டமைப்புகள் அமைக்க, 1,000 ஏக்கர் மேய்க்கால் நிலங்கள், 100 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட உள்ளன. கிராமங்களில் நீர் வளத்தை மேம்படுத்த, 650 கோடி ரூபாயில், 10,000 குளங்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளன.

தடுப்பணைகள், பண்ணை குட்டைகள், நீர் செறிவூட்டும் குழிகள் உட்பட 25,000 நீர் பாதுகாப்பு பணிகள், 250 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும். 1,000 கோடி ரூபாய் செலவில், 1,900 கி.மீ., நீளத்துக்கு, கிராமப்புறங்களில் சிமென்ட் மற்றும் ‘பேவர் பிளாக்’ சாலைகள் அமைக்கப்படும். விரைவில், ‘டெண்டர்’ வெளியிட்டு, பணிகள் தொடங்கப்படும் என, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement