ஆட்டை கொன்றது சிறுத்தை கண்ணாமூச்சி மக்கள் அதிர்ச்சி

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் வனச்சரகம், கண்ணாமூச்சி காப்புக்காடில், இரு மாதங்களாக சுற்றித்திரிந்த சிறுத்தை, பாலமலை அடிவார கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து, ஆடு, கோழி, நாய்களை வேட்டையாடின. இதனால் மேட்டூர் வனச்சரகம் சார்பில், 5 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது. கடந்த, 7 அதிகாலை, கிட்டம்பட்டியில் இருந்த கூண்டில், 10 வயது ஆண் சிறுத்தை சிக்கியது.

தொடர்ந்து வனத்துறையினர், அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இதனால் கண்ணாமூச்சி சுற்றுப்பகுதியில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள், மக்கள் மட்டுமின்றி, தினமும் ரோந்து சென்ற வன ஊழியர்களும் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கண்ணாமூச்சி காப்புக்காடு, ராமன்பட்டி பீட், நெடுஞ்செழியன் நகர், சின்னமலை தோட்டத்தை சேர்ந்த விவசாயி முருகேசன், 60, பட்டியில் புகுந்த சிறுத்தை, அங்கிருந்த, 4 ஆடுகளில் ஒன்றையும், அவரது வளர்ப்பு நாயையும் வேட்டையாடி கொன்றது.

இதை அறிந்த, மேட்டூர் வனச்சரகர் செங்கோட்டையன் உள்ளிட்ட வனத்துறையினர், சம்பவ இடத்தில் விசாரித்தனர். ஏற்கனவே சுற்றித்திரிந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் நிம்மதி அடைந்த கண்ணாமூச்சி விவசாயிகள், மக்கள், தற்போது மற்றொரு சிறுத்தை மலை அடிவாரம் சுற்றுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement