டீசல், பேட்டரி, ஒயர்கள் திருட்டு: மாவட்ட விவசாயிகள் கண்ணீர்

மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. போதிய மழை இல்லாதது, உரம் மற்றும் கூலியாட்கள் தட்டுப்பாடு இருந்தாலும் விவசாயப் பணிகள் தொய்வின்றி நடக்கிறது.

அதன்படி விளைநிலங்களில் உழவு ஓட்டிய விவசாயிகள், அப்பணி முடித்ததும் டிராக்டர்கள், தொழில்நுட்ப கருவிகளை அங்கேயே விட்டு வருகின்றனர். ஏனெனில் உழவு முடித்த வயல்களில் இருந்து உடனடியாக வருவதற்கு பல்வேறு சிரமமங்கள் உள்ளன.

இந்நிலையில், விளைநிலங்களில் நிறுத்தப்படும் டிராக்டர்களில் இருந்து டீசல், பேட்டரி திருடுவதும், மின் மோட்டார்களில் இருந்து காப்பர் ஒயர் திருடுவதும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே விவசாயப் பணியை தொடர்ந்தாலும், இதுபோன்ற இடையூறுகள் விவசாயிகளுக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. மேலும், கூடுதலான டீசல் தேவை, புதிய பேட்டரி மற்றும் காப்பர் ஒயர்கள் பொறுத்துவதால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

இதனை தடுக்கும் வகையில், கிராமங்கள் தோறும் இரவு ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும். சந்தேக நபர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் தரப்பில் இருந்து கலெக்டருக்கு வாட்ஸ் ஆப் புகார்கள் நிரம்பி வழிகிறது.

எனவே, அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த எஸ்.பி., உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement