மத்திய மீன்வளத்துறைச் செயலர் ஆய்வு
மதுரை: மேலுார் அருகே முக்கம்பட்டியில் செயல்படும் பாண்டிமுனீஸ்வரர் ஒருங்கிணைந்த அலங்கார மீன்வளர்ப்புப் பண்ணையை மத்திய மீன்வளத்துறைச் செயலர் அபிலாக்ஷ் லிக்கி ஆய்வு செய்தார்.
அலங்கார மீன் வகைகள், மீன்குஞ்சுகள், அவற்றுக்கான உணவுகள், நீர்தரம், சந்தைப்படுத்துதல் குறித்து மீன்வளர்ப்பு விவசாயிகளிடம் கேட்டறிந்தார். உள்நாட்டு மீன் வகைகள், மீன் குஞ்சு பொறித்தலில் அறிவியல் நடைமுறைகள், தொழில்நுட்ப ஊக்குவிப்பு ஆகியவற்றைப் பாராட்டினார்.
அவர் பேசியதாவது: பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேலுாரில் ரூ.25 லட்சம் ரூபாய் செலவில் பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 34 அலங்கார மீன்வளர்ப்புத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டு உற்பத்தி, மீன்குஞ்சுகள் விநியோகம், உள்கட்டமைப்புகள், திறன் மேம்பாடு, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அலங்கார மீன்வளர்ப்புத் திட்டத்தில் மதுரை இணைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.