வீடு ஒப்படைக்காத கட்டுமான நிறுவனம் ரூ.17 லட்சத்தை வட்டியுடன் தர உத்தரவு

சென்னை: ஒப்பந்தப்படி வீட்டை ஒப்படைக்காத கட்டுமான நிறுவனம், வீடு வாங்கியவர் செலுத்திய, 17 லட்சம் ரூபாயை வட்டியுடன் திருப்பி வழங்க, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேடவாக்கம் ஜல்லடியன்பேட்டையில், ‘ஓசோன் கிரீன்ஸ்’ என்ற பெயரில், ‘செலைன் எஸ்டேட்’ நிறுவனம், அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகிறது.

இதில் வீடு வாங்க, ஸ்ரீவித்யா என்பவர், 2019ல் ஒப்பந்தம் செய்து, 17 லட்சம் ரூபாய் செலுத்தினார். ஒப்பந்தப்படி, 2019 செப்டம்பரில் வீட்டை ஒப்படைப்பதாக கட்டுமான நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஆனால், குறிப்பிட்ட காலத்தில் நிறுவனம் வீட்டை ஒப்படைக்காததால், ரியல் எஸ்டேட் ஆணையத்தில், ஸ்ரீவித்யா புகார் அளித்தார்.

புகாரை விசாரித்த ஆணைய உறுப்பினர்கள் நசீர் அகமது, ரீட்டா ஹரீஷ் தக்கர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

மனுதாரருக்கு உரிய காலத்தில் வீட்டை ஒப்படைக்காததால், அவர் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, அவர் செலுத்திய 17 லட்சம் ரூபாயை கட்டுமான நிறுவனம் வட்டியுடன் திருப்பி வழங்குவதுடன், வழக்குச் செலவாக, 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement