மார்ட்டின் நிறுவன கேஷியர் மரணம் மீண்டும் விசாரிக்க கோர்ட் உத்தரவு

கோவை: கோவை மாவட்டம், உருமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி,46. லாட்டரி அதிபர் மார்ட்டின் நடத்தி வந்த ‘பியூச்சர் கேமிங் அண்ட் ஓட்டல் சர்வீசஸ்’ என்ற நிறுவனத்தில் கேஷியராக வேலை பார்த்தார்.

இந்நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2019, ஏப்., 30ல் சோதனை நடத்தினர். இந்நிலையில், மே 3ல் காரமடை அருகேயுள்ள குட்டையில் பழனிச்சாமி சடலமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக, காரமடை போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பழனிசாமி சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சடலத்தை வாங்க மறுத்த அவரது மகன் ரோகின்குமார், ஐகோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து, பழனிச்சாமியின் சடலம் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

கோவை எஸ்.சி–எஸ்.டி., சிறப்பு கோர்ட்டில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பொருந்தாது என்பதால் வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று, போலீசார் குறிப்பிட்டு இருந்தனர்.

போலீஸ் அறிக்கை தொடர்பாக ஆஜராகி, மனு தாக்கல் செய்ய பழனிச்சாமியின் மகன் ரோகின்குமாருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. அவர் ஆஜராகி புதிய மனு தாக்கல் செய்தார்.

அதில், இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையின்படி மரணத்திற்கான காரணங்களில் பல சந்தேகங்கள் இருப்பதால் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், இந்த வழக்கை மீண்டும் விசாரித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Advertisement