மேலுாரை வறட்சி பகுதியாக அறிவிக்கணும்: விவசாயிகள் வலியுறுத்தல்

மேலுார்: மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வசந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

இதில் விவசாயிகள் கிருஷ்ணன், பெரியாறு ஒருபோக பாசன சங்க தலைவர் முருகன், பழனிச்சாமி, பாண்டி உள்ளிட் விவசாயிகள் பங்கேற்று விவசாயிகளின் தேவை குறித்து பேசினர்.

திருவாதவூர் துாங்கனேந்தல் கண்மாயில் இரும்பு ஷட்டர் இல்லாததால் தண்ணீரை சேமிக்க முடியவில்லை. கூத்தப்பன்பட்டி கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். சிங்கம்புணரி நீட்டிப்பு கால்வாய், ஆலம்பட்டி, கச்சிராயன்பட்டி, பட்டூர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.

ஆகஸ்டில் திறக்க வேண்டிய தண்ணீரை அக்டோபர் மாதமாகியும் பாசனத்திற்கு திறக்காததால் மேலுார் பகுதியை வறட்சி பகுதியாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஆறு வருடமாக மூடிக் கிடக்கும் அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும். கொட்டாம்பட்டி பகுதி மோட்டார் பம்பு செட்டுகளுக்கு தடையின்றி மின்சாரம் கொடுக்க வேண்டும் விநாயகபுரம் விதை பண்ணையில் தென்னங்கன்று பண்ணையை அமைக்க வேண்டும் என்றனர்.

Advertisement