மயில்களின் பெருக்கம் ‘நரி’ இல்லாதது காரணம்
மேட்டுப்பாளையம்: விவசாய நிலங்களில், மயில்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருவதால், விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு தற்போது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது, மயில்களின் பெருக்கம். நெல், சிறுதானியங்கள், கடலை, காய்கறி உட்பட பல்வேறு பயிர்களை, மயில்கள் கூட்டம் கூட்டமாக வந்து நாசம் செய்வதால், விவசாயிகள் பெரும் பொருளாதார நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். ஒரு காலத்தில் வனங்களில் அதிகம் தென்பட்ட மயில்கள், இன்று கிராமங்களை தாண்டி, நகரங்களை ஒட்டியுள்ள விவசாய நிலங்களையும் ஆக்கிரமித்துள்ளன. இம்மாற்றத்துக்கு பின்னால், நரிகளின் அழிவுதான் முக்கியமான காரணமாக இருக்கிறது.
இயற்கையின் உணவு சங்கிலியில் ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. மயில்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பதில் நரிகளுக்கு மிக முக்கிய பங்கு இருந்தது.
மயில்கள் பொதுவாக புதர்களில் தான் குஞ்சு பொரிக்கும். வனங்களிலும், விவசாய நிலங்களை ஒட்டியுள்ள புதர்களிலும் சுற்றித்திரியும் நரிகள், மயிலின் முட்டைகளை உணவாக்கிக் கொள்ளும். இது மயில்களின் இனப்பெருக்கத்தை இயற்கையாகவே கட்டுக்குள் வைத்திருந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி கூறுகையில், ‘‘நரி, காட்டுப்பூனைகள் இல்லாத சூழலில், மயில்களின் முட்டைகளுக்கு எவ்வித ஆபத்தும் இருப்பதில்லை. இதுவே, கடந்த சில ஆண்டுகளில் மயில்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருக மிக முக்கியக் காரணம். மயில்கள் இந்தியாவின் தேசிய பறவை என்பதால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவற்றுக்குக் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் அவற்றை விரட்ட மட்டுமே முடியும் தவிர, வேறெந்த நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை,’’ என்றார்.
சிறுமுகை வனச்சரகர் தினேஷ் கூறுகையில், ‘‘கிராமப்புறங்களில் பரவி வரும் அதிவேக நகரமயமாக்கல், புதர்க்காடுகள் அழிக்கப்பட்டது, வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு, விவசாய நிலங்களையொட்டி போக்குவரத்து அதிகரிப்பு, மனிதர்கள் நடமாட்டம் உட்பட பல்வேறு காரணங்களால், நரிகள், விவசாய நிலங்களுக்கு வருவது குறைந்துள்ளது. நரிகளில் உல்ப் (wolf) வகை பெரியது, பாக்ஸ் (fox) வகை சிறியது. இந்தியாவில், வடமாநிலங்களில் அதிகம் நரிகள் உள்ளன; தமிழகத்தில் குறைவு. நரிகள் கூட்டமாக வந்துதான் வேட்டையாடும். நரி கூட்டம் வரும் போது, தொந்தரவு இருப்பதாக உணர்ந்தால், அவை மீண்டும் அப்பகுதிக்கு வருவது இல்லை,’’ என்றார்.
மேலும்
-
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் நலதிட்ட உதவி வழங்கல்
-
கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
-
‘தினமலர்’ பவளவிழா கட்டுரை போட்டி புதுச்சேரி கல்லுாரி மாணவி முதலிடம்
-
குன்றத்து கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிகள் துவக்கம்
-
கண்காணியுங்க பஸ்களில் பட்டாசு பார்சல்கள் அனுப்புவதை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை அவசியம்
-
ஆர்.எஸ்.மங்கலத்தல் போக்கு காட்டும் பருவ மழையால் விவசாயிகள் ஏமாற்றம்