நீண்டகால போராட்டத்திற்கு தயாராகிறதா டில்லி? உள்துறை அமைச்சகத்துக்கு டில்லி போலீஸ் கடிதம்
–சிறப்பு நிருபர்–
தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தும் போராட்டங்கள் தீவிரமடையக்கூடும் என்று, உளவுத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து, தற்போது பணியில் உள்ள மத்திய ஆயுத போலீஸ் படையின் 273 குழுக்களுக்கு, வரும் 20ம் தேதி வரை கால நீட்டிப்பு தருமாறு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம், டில்லி போலீஸ் கோரிக்கை வைத்துள்ளது.
தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தும் போராட்டங்கள் டில்லியில் நடைபெற்று வருகின்றன. ஜந்தர் மந்தர் பகுதி தடை செய்யப்பட்ட இடம் என்றாகிவிட்டதால், எங்கெல்லாம் கூடுவதற்கு போராட்டக்காரர்களால் முடிகிறதோ, அங்கேயே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது டில்லி போலீசாருக்கு பெரும் தலைவலியாக மாறிவருகிறது.
பார்லிமென்ட் கட்டடம், இந்தியா கேட் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளுக்கு அருகில், அதிக அளவில் மக்கள் கூட வாய்ப்புள்ளதாக போலீஸ் எதிர்பார்க்கிறது. எனவே, இங்கு சட்டம் – -ஒழுங்கு சவால்கள் உருவாகக்கூடும்.
நீண்டகால போராட்டத்திற்கு அரசு ஆயத்தமாக வேண்டும் என்ற கரப்பான்பூச்சி கட்சியினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது வரும் நாட்களில் தொடர் போராட்டங்கள் இருக்கலாம் என்று உளவுத்துறையும் எச்சரித்துள்ளது. எனவே, அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக டில்லி போலீஸ் கருதுகிறது.
டில்லியில் பாதுகாப்புப் பணிக்காக, மத்திய ஆயுத போலீஸ் படையின் 301 குழுக்களுக்கு, உள்துறை அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது. இவற்றில், 221 படைக் குழுக்களுக்கு, அக்டோபர் 6ம் தேதியும், அதைத் தொடர்ந்து, மேலும் 80 படைக் குழுக்களுக்கு, அக்டோபர் 8ம் தேதியும், ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில்தான், நகரம் முழுதும் உள்ள பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பராமரிக்க அக்டோபர் 12-க்கு பிறகும் படைகளின் பாதுகாப்பை நீட்டிக்கும்படி டில்லி போலீஸ் கோரியுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகத்துக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், தற்போதுள்ள 273 படைக் குழுக்களை வரும் அக்டோபர் 20 வரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வைக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒரு படைக் குழுவிற்கு, 100 வீரர்கள் வீதம் கணக்கிடப்பட்டால்கூட, இந்த கோரிக்கையில் தோராயமாக 27,300 வீரர்கள் அடங்குவர். இருப்பினும், உள்துறை அமைச்சகம் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதா இல்லையா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
மேலும்
-
மேலுாரை வறட்சி பகுதியாக அறிவிக்கணும்: விவசாயிகள் வலியுறுத்தல்
-
தாய்மாமன் தங்க மோதிரம் 110 குழந்தைகளுக்கு வழங்கல்
-
மயில்களின் பெருக்கம் ‘நரி’ இல்லாதது காரணம்
-
தினமலர் எதிரொலி கணித பூங்கா பிரச்னைக்கு கிடைத்து விட்டது தீர்வு
-
560 கிலோ பட்டாசு பறிமுதல்
-
பட்டாபிராமில் ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்