நரிக்குடி புல்வாய்க்கரையில் 17ம் நூற்றாண்டு சதிக்கல்
நரிக்குடி: நரிக்குடி புல்வாய்க்கரையில் நாயக்கர் காலத்தை சேர்ந்த 16, 17ம் நூற்றாண்டு சதிக்கல் மண்ணில் பாதி அளவு புதைந்த நிலையில் கண்டறியப்பட்டது.
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன தொல்லியல்,கல்வெட்டியியல் ஆராய்ச்சி மாணவி சரண்யா கூறியதாவது,
16, 17 ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சதிக்கல்லை ஆய்வுகள் செய்த போது, அதில் வீரர் ஒருவரின் சிற்பமும், அவரது மனைவியும் இடம்பெற்ற சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருந்தது. இந்த சதிக்கல் சிற்பங்கள் ஒன்றரை அடி அகலம், 3 அடி உயரம் கொண்டதாக உள்ளது. இந்த சிற்பத்தில் வீரர் ஒருவர் இடது காலை மடக்கி சுகாசன கோலத்தில் அமர்ந்த நிலையில், வலது கையில் வாளைப் பிடித்தவாறு கம்பீரமாக காட்சியளிக்கிறார். அவரது தலையில் கொண்டை, காதுகளில் குண்டலங்கள், கழுத்தில் கண்டிகை, சவடி, மணிமாலை, இடையில் அரைப்பட்டிகை, புஜங்களில் தோள்வளையம், கால்களில் சிலம்பு போன்ற ஆபரணங்கள் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
வீரரின் இடப்புறத்தில் அவரது மனைவியின் உருவம் இடம் பெற்றிருந்தது. அவர் ஒரு கையில் மலர்க்கொத்தையும், மற்றொரு கையில் உருண்டையான பொருளையும் ஏந்திய நிலையில் சிற்பம் செதுக்கப்பட்டிருந்தது. அவரது தலையில் தமிழம் எனப்படும் கொண்டை அலங்காரத்துடன் காணப்பட்டது. மேலும் கழுத்தில் சரப்பள்ளி, அரும்புச்சரம், கையில் கைவளையும், தோள் வளைகள், உள்ளிட்ட பல்வேறு அணிகலன்களுடன் அழகுற வடிவமைக்கப்பட்டிருந்தன.
மேலும் சிற்பங்களின் மேற்பகுதியில் கூரை போன்ற அமைப்பு சிதைந்த நிலையில் உள்ளன. போரில் உயிரிழந்த கணவருடன் அவரது மனைவியும் உடன்கட்டை ஏறி உயிர்த்தியாகம் செய்ததை நினைவு கூறும் வகையில் இந்த சதிக்கல் அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பல நூற்றாண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கிடைத்துள்ள எஸ்.கல்லுமடை பூலாங்குளம் கிராமத்திற்கு அருகில் இந்த சதிக்கல் கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
கரப்பான் கும்பலின் வக்கீல், பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு கருணை மனு போட்டவர்!
-
அரசு பஸ்களில் கால் நீட்ட முடியவில்லையே; 2 + 2 சீட் அமைக்க கோரிக்கை
-
6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்! சென்னை, மதுரை உள்ளிட்ட 31 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை
-
தொடர் விடுமுறையால் எகிறியது விமான கட்டணம்
-
நா.பேட்டையில் கொட்டிய மழை
-
இளம் தொழில் முனைவோர் வழிகாட்டி சந்திப்பு கூட்டம்