அதிமுக தொண்டர்களுக்கு தேவை நம்பிக்கை: சொல்கிறார் சி.வி.சண்முகம்

சென்னை:

அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் மீது நான் அதிருப்தியில் உள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம். கருத்து வேறுபாடு உள்ளது புதிய விஷயம் இல்லை.

அதிமுக தோல்வி அடைந்தது.இது ஒரு மோசமான தோல்வி. இதை அதிமுக தலைமை கூர்ந்து கவனித்து என்ன காரணம் என்பதை கலந்தாலோசிக்க வேண்டும். சீர்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை முதலில் இருந்து சொல்லி வருகிறோம். பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என சொல்கிறோம்.

அதிமுக தொண்டர்களுக்கு தேவை ஒரு நம்பிக்கை. அதனை கொடுத்தால் அதிமுகவை மீட்டெடுக்கலாம் என்ற செய்தியை தேர்தல் முடிவு அளித்தது. தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுப்பது முக்கியம். அதிமுகவில் நான் எந்த பொறுப்பிலும் இல்லை. நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் எடுத்தால் ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம்.

கருத்து வேறுபாடு இருக்கலாம். இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. வரவேற்கத்தக்க மாற்றம். அதிமுக தோற்றது கஷ்டம். மன வருத்தம் உள்ளது.கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற ஆசை உள்ளது. அனைவரையும் அரவணைத்து கொண்டு சென்றால் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அதிமுகவை கொண்டு வரலாம். மக்களிடம் இன்னும் அதிமுக மீது நம்பிக்கை உள்ளது. இவ்வாறு சி.வி.சண்முகம் கூறினார்.

Advertisement