பங்குச் சந்தையில் அதிக லாபம் எனக்கூறி பெண்ணிடம் ரூ.9.75 லட்சம் மோசடி

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பங்குச்சந்தையில் அதிக லாபம் பெறமுடியும் என நம்பி போலி ஆன்லைன் செயலியில் பணத்தை கட்டிய பெண், ரூ.9.75 லட்சத்தை இழந்தார்.

ராமநாதபுரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த 45 வயது பெண், சமூக வலைதளத்தில் பங்குச்சந்தை முதலீடு குறித்த விளம்பரத்தை பார்த்தார்.

அதில் குறிப்பிடப்பட்ட செயலியை அலைபேசியில் பதிவிறக்கம் செய்து தனது விபரங்களை கொடுத்தார்.

இந்த செயலியில் பணத்தை முதலீடு செய்தால் பங்குச்சந்தையில் அதிக லாபம் பெறலாம் என அவர் நம்பினார். தொடர்ந்து பல்வேறு தவணைகளாக அந்த செயலியில் ரூ.9.75 லட்சத்தை செலுத்தினார். பின் அந்த செயலி முடங்கியது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண், ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.

மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்கு விபரங்களை ஆய்வு செய்த போலீசார், அப்பெண் அனுப்பிய பணத்திலிருந்து ரூ.6.49 லட்சத்தை முடக்கினர். தொடர்ந்து மோசடி குறித்து விசாரிக்கின்றனர்.

தனிநபர் கடன் மோசடி





இதேபோல் கமுதி அருகே பெருநாழி, சண்முகபுரத்தை சேர்ந்த 30 வயது நபருக்கு தனிநபர் கடன் வழங்குவதாக அலைபேசியில் அழைப்பு வந்தது. அதில் பல தவணைகளாக கடன் தருவதாகவும், அதற்கு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதை நம்பி அந்த நபர் பல்வேறு தவணைகளாக ரூ.1.10 லட்சத்தை அனுப்பினார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நபர், ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். உடனே வாலிபர் அனுப்பிய வங்கி கணக்கில் இருந்த ரூ.31 ஆயிரத்தை போலீசார் முடக்கினர்.

Advertisement