அதிகாரத்தில் இருப்பவர்கள் திறமையானவர்களை அருகில் வைத்துக்கொள்ள விரும்பிய காலம் கடந்துவிட்டது: உயர்நீதிமன்றம் அதிருப்தி
மதுரை: அதிகாரத்தில் இருப்பவர்கள் திறமையானவர்களை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள விரும்பிய காலம் கடந்துவிட்டது. அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவாளர்களுக்கு பதவிகளை வழங்கும் முறையை பின்பற்றுகிறோம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தியை பதிவு செய்தது.
கன்னியாகுமரி மாவட்டம் பெருவிளை வழக்கறிஞர் ஜெய்குமார் தாக்கல் செய்த மனு: எனது புகாரின் பேரில் ஆசாரிப்பள்ளம் போலீசில் ஒரு வழக்கு பதியப்பட்டது. இது கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். புகார்தாரர் வழக்கறிஞர் என்பதால் குற்றம் சாட்டப்பட்டவருக்காக தங்கள் சங்க உறுப்பினர்கள் யாரும் ஆஜராகக் கூடாது என கன்னியாகுமரி வழக்கறிஞர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.
குற்றம் சாட்டப்பட்டவர் உச்சநீதிமன்றத்தை அணுகினார். அந்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு விசாரணை திருநெல்வேலி கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கருணாநிதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், திருநெல்வேலி வழக்கறிஞர் சங்கத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
மனசாட்சிக்கு அறைகூவல்
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்வு பிறப்பித்த உத்தரவு: ஒரு வழக்கில் நீதிபதி மார்கண்டேய கட்ஜு வழங்கிய தீர்ப்பை, வழக்கறிஞர் சங்கத்தின் ஒவ்வொரு நிர்வாகியும் கட்டாயம் படிக்க வேண்டும். அதில் உள்ள கருத்துக்களை உள்வாங்கி, தங்களது தொழிலில் கடைப்பிடிப்பது அவசியம். எதிர்காலத்தில் கன்னியாகுமரி வழக்கறிஞர் சங்கம் இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது. இது நீதிமன்ற உத்தரவு அல்ல. மாறாக, வழக்கறிஞர் சங்க உறுப்பினர்களின் மனசாட்சிக்கு விடுக்கப்படும் ஓர் அறைகூவல்.
மனுதாரர், அரசு தரப்பு வழக்கறிஞராக வாதிட்ட கருணாநிதி தனது கடமைகளை சரியாக நிறைவேற்றவில்லை. விசாரணை அதிகாரி எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்தபோதிலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய கருணாநிதி மனு தாக்கல் செய்யவில்லை,’ என்கிறார். ஒரு வழக்கறிஞர் தொழில் ரீதியாக விதிமீறலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே, புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு உத்தரவிட முடியும்.
ஊதுகுழல் அல்ல
கருணாநிதி குறிப்பிட்ட காலம் அரசு தரப்பு வழக்கறிஞராக இருந்தார். அவர் காவல்துறையின் ஊது குழல் அல்ல. ஜாமினை ரத்து செய்வதற்கான மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று விசாரணை அதிகாரி பரிந்துரைத்தால், அதை அரசு தரப்பு வழக்கறிஞர் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. அவர் சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும். ஒரு குற்றவியல் வழக்கை கையாள்வது தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் விளக்கம் கோர, ஒழுங்கு நடவடிக்கை அதிகாரத்தை பார் கவுன்சிலுக்கு வழங்கினால் அது சட்டத்தின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துவிடும். பாகிஸ்தானில் பார்லிமென்ட் ஒப்புதல் இல்லாமலேயே மத்திய கிழக்கு பகுதியில் படைகளை நிலைநிறுத்துவது குறித்து அந்நாட்டு ராணுவ தளபதி முனீர் முடிவெடுப்பார்; இந்தியாவில் நிலைமை அப்படியல்ல. ராணுவம் எப்போதும் சிவில் தலைமைக்கு கட்டுப்பட்டே செயல்படும்.
அரசு தரப்பு வழக்கறிஞரின் செயல்பாட்டில் குறைபாடு இருப்பதை வழக்கை விசாரிக்கும் நீதிபதி கண்டறிந்து அதை உத்தரவில் குறிப்பிட்டால் மட்டுமே பார் கவுன்சில் நடவடிக்கை எடுப்பதற்கான அடிப்படையாக அமைய முடியும். வழக்கின் நிலை குறித்து மனுதாரர் கவலைப்படத் தேவையில்லை. அரசு தரப்பில் வாதிடும் பொறுப்பு இனி கருணாநிதியிடம் இல்லை.
அதிகாரத்தில் இருப்பவர்கள் திறமையானவர்களை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள விரும்பிய காலம் கடந்துவிட்டது. அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு பதவிகளை வழங்கும் முறையை பின்பற்றுகிறோம்.
உயர் மட்டத்தில் மாற்றம் ஏற்படும்போது, சட்ட அதிகாரிகள் தங்கள் பதவியிலிருந்து விலக வேண்டிய சூழல் உள்ளது. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சமர்ப்பித்த பட்டியலை கலெக்டர்கள் அப்படியே ஏற்று அங்கீகரித்ததை நாம் அறிவோம். இருப்பினும், சில தலையீடுகள் நிகழ்ந்தன; அவை நல்லதற்கே என்று நாம் நம்புகிறோம். கருணாநிதி அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர் என்பதால், ஆட்சி மாற்றத்தின்போது அவர் பதவியிலிருந்து விலக வேண்டியது இயல்பானதே. அவர் பதவி விலகினாலும் மனுதாரர் அவரை துரத்திக்கொண்டே இருக்கிறார்.
கிளிப்பிள்ளை அல்ல
அரசு தரப்பு வழக்கறிஞர் ஆவணங்களை முழுமையாக படித்து, திறம்பட வழக்கை நடத்த வேண்டும். போலீசார் கூறுவதை அப்படியே கிளிப்பிள்ளை போல அவர் திரும்பச் சொல்லக்கூடாது. மனுதாரரின் குற்றச்சாட்டு ஒழுங்கு நடவடிக்கை வரம்பிற்குள் வரும் வகையிலான தொழில் ரீதியான தவறாக அமையவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
மேலும்
-
புதிய வாக்காளர் சேர்ப்புக்கு சிறப்பு திருத்த பணி: தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் நடக்கிறது
-
பிரெஞ்சு மொழி கல்வி பரிமாற்றத்தில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
-
தொடர் குற்றத்தில் ஈடுபட்டவருக்கு குண்டாஸ்
-
போக்குவரத்து துணை ஆணையருக்கு கூடுதல் பொறுப்பு
-
திரிபுர பைரவி மூல மந்திர ஹோமம்
-
93,493 வாக்காளர்கள் தகுதியற்றவர்கள் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்