தக்காளி விலை திடீர் சரிவு: வரத்தும் குறைந்தது
உடுமலை: உடுமலையில் தக்காளி வரத்தும், விலையும் குறைந்ததால், விவசாயிகள் பாதித்துள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், செடி மற்றும் கொடி சாகுபடி முறையில் அதிகளவு தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வந்தது. பருவ மழைகள் ஏமாற்றியதால், கடும் வறட்சி ஏற்பட்டது.
இதனால், நடப்பாண்டு தக்காளி சாகுபடி பெருமளவு குறைந்தது. இறவை பாசனத்தில் குறைந்தளவு தக்காளி சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
இப்பகுதிகளில் விளையும் காய்கறிகளை, விவசாயிகள், உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளம் மாநிலம், மூணாறு, மறையூர் பகுதி வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் தக்காளி வரத்து குறைந்த நிலையில், 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி, 600 ரூபாய் வரை ஏலம் போனது.
இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழை மற்றும் வைரஸ் நோய், காய்கள் சிறுத்துப்போதல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தாக்குதல் காரணமாக, மகசூல் பெருமளவு குறைந்ததோடு, தக்காளி காய்கள் சிறியதாகவும், வெண்மை நிறமாகவும் மாறி, தரமற்றதாக மாறியது.
இதனால், தக்காளி விலை கடும் சரிவை சந்தித்து, நேற்று, ஒரு பெட்டி, 200 முதல், 250 ரூபாய் வரை மட்டுமே விற்றது. இதனால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், ‘நடப்பாண்டு, வறட்சி மற்றும் நோய்த்தாக்குதல் காரணமாக, தக்காளி சாகுபடி பாதிப்பை சந்தித்துள்ளது, பல முறை மருந்து அடித்தாலும், காய்கள் சிறியதாகவும், வெண்நிறத்தில் மாறி, தரமற்றதாக காணப்படுகிறது. அதிலும், கடந்த வாரம் பெய்த மழைக்கு தாங்காமலும்,செடிகள் பாதித்தன. இதனால், தற்போது தக்காளி வரத்து குறைந்த நிலையில், விலையும் சரிந்துள்ளது,’ என்றனர்.
மேலும்
-
கரப்பான் கும்பலின் வக்கீல், பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு கருணை மனு போட்டவர்!
-
அரசு பஸ்களில் கால் நீட்ட முடியவில்லையே; 2 + 2 சீட் அமைக்க கோரிக்கை
-
6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்! சென்னை, மதுரை உள்ளிட்ட 31 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை
-
தொடர் விடுமுறையால் எகிறியது விமான கட்டணம்
-
நா.பேட்டையில் கொட்டிய மழை
-
இளம் தொழில் முனைவோர் வழிகாட்டி சந்திப்பு கூட்டம்