தினமும் ஆறு டன் மக்காத கழிவுகள் சேகரிப்பு: தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைப்பு

உடுமலை: உடுமலை நகராட்சியில், தினமும் ஆறு டன் வரை மக்காத கழிவுகள் சேகரிக்கப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாக அனுப்பி வைக்கப்படுகிறது.

உடுமலை நகராட்சி பகுதிகளில், வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு நேரடியாகச்சென்று, துாய்மைப்பணியாளர்கள் கழிவுகளை சேகரித்து வருகின்றனர். இதில், மக்கும் கழிவுகள், நுண் உரக்குடில்களில் இயற்கை உரமாக மாற்றப்படுகிறது.

மேலும், மக்காத கழிவுகளான பேப்பர், பிளாஸ்டிக், தட்டு, செப்பல், துணிமணிகள், பிளாஸ்டிக் கவர்கள், ரெக்ஸின் ஆகிய கழிவுகள் தினமும், 6 டன் வரை சேகரமாகிறது.

இக்கழிவுகள் நகராட்சியிலுள்ள, வள மீட்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, துாய்மைப்பணியாளர்கள் வாயிலாக, 50 கிலோ கொண்ட கட்டுகளாக, பேலிங் செய்யப்படுகிறது.

இக்கழிவுகள், திருச்சியிலுள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு எரிபொருளாக அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு, மாதம் தோறும், நகராட்சி பகுதிகளில், சேகரமாகும், 120 டன் வரை பிளாஸ்டிக் கழிவுகள், சிமெண்ட் தொழிற்சாலை மற்றும் திருப்பூரிலுள்ள நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும், மறு சுழற்சிக்கு பயன்படும், அட்டைபெட்டி, கண்ணாடி பாட்டில்கள், பால் கவர்கள், இரும்பு தகரம், அலுமினியம் பொருட்கள் பிரிக்கப்பட்டு, தூய்மைப்பணியாளர்கள், மறுசுழற்சி மேற்கொள்ளும் கடைகளுக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு, நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம், ஒரு டன் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் நகராட்சி உரக்கலவை கிடங்கில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக, கழிவுகளை பிரித்து மறுசுழற்சிக்கு தேவையானவற்றை, மாதம் 30 டன் அளவில், எடுத்துச் செல்லப்படுகிறது.

எனவே நகராட்சியில் வசிக்கும் மக்கள், கழிவுகளை நான்கு வகைகளாக பிரித்து, மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் பிற ஆபத்தான கழிவுகளை, நகராட்சி தூய்மை பணியாளர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்.

Advertisement