சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் ; எலான் மஸ்க்கிற்கு ரிலையன்ஸ் பதிலடி

4

புதுடில்லி: இந்தியாவில் தனது ஸ்டாலிங்க் செயற்கைக்கோள் சேவையை அறிமுகம் செய்தே ஆக வேண்டும் என்று அதன் உரிமையாளர் எலான் மஸ்க் விடாபிடியாக உள்ளார். ஆனால், அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆதிக்கத்தினால், இந்தியாவில் தங்களின் சேவையை துவங்குவதில் தாமதிக்கப்படுவதாக அவர் வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு, இந்தியர்களின் தரவுகளை பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியம். இந்திய சட்டங்களுக்கு உட்பட்டால் மட்டுமே இந்தியாவில் தொழில் துவங்கவோ, சேவை தொடங்கவோ முடியும் என்று திட்டவட்டமாக கூறி விட்டது.

இந்த விவகாரத்தில் அமைதி காத்து வந்த அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், தற்போது எலான் மஸ்க்கிற்கு மறைமுகமாக பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கை; இந்திய சந்தையில் முதலீடுகளையும், புதுமைகளையும் வரவேற்கிறோம். உள்ளூர் நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் என யாராக இருந்தாலும், சட்டம் அனைவருக்கும் சமமானது.

2016ம் ஆண்டில் எந்தவொரு வாடிக்கையாளரும் இல்லாமல் சந்தையில் நுழைந்த ஜியோ, தற்போது 10 ஆண்டுகளுக்குள் 53 கோடி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த விலையில் தரமான தரவு சேவையை வழங்கி வருகிறது.

ஜியோவின் சொந்த செயற்கைக்கோள் சேவைகளுக்கான அனுமதிகளும் இன்னும் காத்திருப்பில் உள்ளன. இந்தத் துறை எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. இங்கு நிலவும் போட்டியை வரவேற்கிறோம்.

ஸ்டார்லிங்க் உள்ளிட்ட அனைத்து ஆபரேட்டர்களும் வணிக ரீதியான செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்பு, உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Advertisement