பள்ளிகளில் கேக்கிற்கு பதில் கடலைமிட்டாய் வழங்க உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்

2

துாத்துக்குடி: குழந்தைகள் தின விழாவில் மாணவ, மாணவியருக்கு, கேக் வழங்கும் முடிவை கைவிட்டு, ‘கடலைமிட்டாய் வழங்க வேண்டும்’ என, உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு மதிய சத்துணவுடன் இனிப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம், 61 லட்சத்து 84,566 'ஸ்பாஞ்ச் கேக்' துண்டுகளை கொள்முதல் செய்வதற்கான குறுகிய கால டெண்டர் அறிவிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேக் வழங்கும் முடிவை மறுபரிசீலனை செய்து, புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க செயலர் கண்ணன் கூறியதாவது:

குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குவது என்ற அரசின் அறிவிப்பு வரவேற்புக்குரியது. கேக் வழங்கப்படும் என்ற அறிவிப்பு எங்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதை மறுபரிசீலனை செய்து, புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க வேண்டும்.

அவ்வாறு அறிவித்தால் எங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு மேலும் ஓர் அங்கீகாரம் கிடைக்கும்.

கோவில்பட்டி கடலை மிட்டாயில் தற்போது முருங்கைக்கீரை கடலை மிட்டாய், நாட்டுச் சோளம் கடலை மிட்டாய், நவதானிய கடலை மிட்டாய் எனச் சத்தான பல்வேறு வகையான கடலை மிட்டாய்களை உற்பத்தி செய்து வருகிறோம். இதற்கான வாய்ப்பினை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement