அமெரிக்கா டாக்டரிடம் ரூ.7.50 கோடி மோசடி
நாமக்கல்: ‘தங்க சுரங்க தொழிலில் முதலீடு செய்தால், ‘பார்ட்னர்ஷிப்’ கொடுப்பதாக கூறி, 7.50 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அமெரிக்காவில் எலும்பு மருத்துவராக பணியாற்றும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சரவணராஜா, 52, என்பவர், எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
நான், அமெரிக்காவில் எலும்பு டாக்டராக பணியாற்றி வருகிறேன். 2022 ஆக.,ல், திருச்செங்கோடை சேர்ந்த நடன சபேசன், கார்த்திக் ஆகியோர், தங்க சுரங்க தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி, 2024ல் வங்கி கணக்கு மூலம், 7.50 கோடி ரூபாய் பெற்றனர்.
அவர்கள் கூறியபடி நடக்காததால், அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டதற்கு, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரில், கோவை போலீசார், நடனசபேசன், கார்த்திக் உட்பட, நான்கு பேர் மீது வழக்கு பதிந்தனர்.
தற்போது, கோவை நகர குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தல்படி, நாமக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளேன். மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.