துவங்குகிறது புதிய அத்தியாயம்; உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது; பியூஷ் கோயல்

1

மும்பை: இந்தியாவும் கனடாவும் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவங்குகின்றன; உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.

மும்பையில் நடந்த வர்த்தகம் தொடர்பான நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கனடாவின் வர்த்தக துறை அமைச்சர் மனிந்தர் சித்து ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் பேசியதாவது:

கனடா வர்த்தக துறை அமைச்சர் சித்துவை எனக்குத் தெரிந்த காலத்திலிருந்தே, அவருடனான எனது உறவு தனித்துவமானதாக இருந்து வருகிறது. வர்த்தக துறை அமைச்சர் என்ற பொறுப்பில் அவர் ஒரு சிறப்பான பங்களிப்பை வழங்குகிறார்.

தனியார் துறையில் அவருக்கு மிக முக்கியமான அனுபவம் உள்ளது.

அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பே அவர் வணிகம் சார்ந்த விஷயங்களை நன்கு அறிந்திருந்தார்; எனவே, பேச்சுவார்த்தையின் போது வணிகத்தின் தேவைகளை அவர் தெளிவாகப் புரிந்து கொள்கிறார்.

ஒரு தொழில்முனைவோராக அவருக்குள்ள அனுபவம், இரு நாடுகளின் தேவைகள் மற்றும் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்பட அவருக்கு உதவுகிறது. நமது அரசுகளுக்கு இடையிலான உறவு வலுவடைந்து வரும் நிலையில், இரு நாட்டு வணிகங்களையும் ஒன்றிணைப்பதில் அவர் மிக முக்கியப் பங்காற்றுவார் என்று நான் கருதுகிறேன்.

அரசு, வணிகம் மற்றும் மக்கள் இடையிலான உறவுகள் வலுப்பெறும் போது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இந்தியாவும், கனடாவும் ஒரு புதிய அத்தியாயத்தை துவங்குகின்றன. இவ்வாறு பியூஷ் கோயல் பேசினார்.

Advertisement