இளைஞர்களை அராஜகத்தில் தள்ளி ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் முயற்சி; ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
புதுடில்லி: தேர்தல் ஆணையருக்கும், எஸ்ஐஆர் பணிகளுக்கும் எதிராக காங்கிரஸ் நடத்தி வரும் போராட்டம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சனம் செய்துள்ளார்.
அவர் கூறியதாவது; அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் இளைஞர்களை அராஜகத்தை நோக்கித் தள்ளுகின்றன. ராகுல் இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார். நாட்டை உருவாக்க பேச்சுவார்த்தை என்ற பாதையை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். மோதலை நாங்கள் விரும்பவில்லை.
1975 எமர்ஜென்சி, 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள், அயோத்தி விவகாரத்தை தொடர்ந்து, அரசியல் அமைப்புகளுக்கு எதிராக காங்கிரஸ் செய்யும் 4வது மன்னிப்பில்லாத குற்றம் இந்தப் போராட்டம் தான்.
1975ல் அப்போதைய காங்கிரஸ் பிரதமர் இந்திரா, அவசர நிலை பிரகடனத்தின் போது, ஜனநாயகத்தை சிறையில் அடைத்தார். இப்போது ராகுல் அரசியலமைப்பு புத்தகத்தை தனது பையில் போட்டுக் கொண்டு, குழப்பத்தையும், அராஜகத்தையும் பரப்ப முயற்சிக்கிறார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது, தேர்தல் ஆணையத்தை தன்னுடைய கைப்பாவையாக மாற்றிக் கொண்டது. அப்போது, தேர்தல் ஆணையராக இருந்த நவீன் சாவ்லா, காங்கிரசுக்கு தேர்தல் ரகசியங்களை பகிர்ந்தார். அவரை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட போது, தலைமை தேர்தல் ஆணையராக காங்கிரஸ் பதவி உயர்வு வழங்கியது.
1993ல் வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே, காங்கிரஸால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இது தேர்தல் தோல்வியா? ஓட்டு திருட்டா? தேர்தல் தோல்விகளுக்குத் தேர்தல் ஆணையத்தின் மீது பழிபோடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.