தமிழகம் முழுவதும் சீரான தொழில் வளர்ச்சி ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு திட்டங்கள்

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் போன்ற முக்கிய நகரங்களை மட்டும் சார்ந்திருக்காமல், அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொழில்களை தொடங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதலீட்டாளர்கள் மாநாடு 2026:

மாநில அரசு நடப்பாண்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவித்த 106 திட்டங்களில், 54 திட்டங்கள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களைத் தாண்டி அமையவுள்ளன. இதன் வாயிலாக 40,722 கோடி ரூபாய் முதலீடும், 61,480 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், அதிகபட்சமாக தரவு மையங்கள் அமைப்பதற்கு 26,417 கோடி ரூபாயும், ஆட்டோமொபைல் துறைக்கு 17,073 கோடி ரூபாயும் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியை சுற்றி மெகா திட்டங்கள்:

தென்கொரியாவை சேர்ந்த ஹெச்.டி., ஹூண்டாய் நிறுவனம், தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஏப்ரலில் கையெழுத்தானது. இந்த தளத்தின் வாயிலாக 15,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.

முடிவைதானேந்தல் பகுதியில் 2,570 ஏக்கரில் அமையவுள்ள சிப்காட் பூங்கா வாயிலாக 5,000 கோடி ரூபாய் முதலீடும், சில்லாநத்தம் பகுதியில் 1,294 ஏக்கரில் அமையவுள்ள மின்சார வாகன பூங்கா வாயிலாக 7,000 கோடி ரூபாய் முதலீடும் ஈர்க்கப்பட உள்ளது. குலசேகரபட்டினம் இஸ்ரோ ஏவுதளத்தை மையமாக வைத்து, தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே ‘விண்வெளி தொழில் முதலீட்டு மண்டலம்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்: இம்மாவட்டத்தில் தோல் அல்லாத காலணி தயாரிப்பு ஆலைக்கு 1,000 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட உள்ளது.

கரூர் – பெரம்பலூர்: கரூர் மற்றும் பெரம்பலூரில் ‘எவர்வன் கோத்தாரி புட்வேர்’ நிறுவனம் 5,000 கோடி ரூபாய் முதலீட்டில் காலணி ஆலைகளை அமைக்க முன்னதாக ஒப்பந்தம் கையெழுத்தானது.

விழுப்புரம்–நாமக்கல்: விழுப்புரம் ஓமந்தூர் மற்றும் நாமக்கல் லாத்துவாடி ஆகிய இடங்களில் தலா 1,000 கோடி ரூபாயில் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.

சிவகாசி: பட்டாசு தொழிலுக்கான பொது வசதி மையம் அமைக்க 2 கோடி ரூபாயில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. திருநெல்வேலி: கங்கைகொண்டானில் தொழிலாளர் தங்கும் விடுதிக்காக 130 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சவால்கள்:

கேரளாவின் விழிஞம் துறைமுகத்தில் அதானி குழுமம் 10,000 கோடி ரூபாயில் மேற்கொண்டு வரும் விரிவாக்க பணிகள் மற்றும் மின்கட்டண உயர்வு ஆகியவை தூத்துக்குடி துறைமுகத்திற்கும், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கும் சவாலாக அமையும் என துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement