பில் இல்லாமல் பொருட்கள் விற்பனை அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவதாக மனு

கரூர்,:கரூர் மாவட்ட வர்த்தக மற்றும் தொழிற் கழக தலைவர் வெங்கட்ராமன், கரூர் கலெக்டர் முத்துக்

குமரனிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கரூர் மாநகராட்சியின் முக்கிய வீதிகளில், தீபாவளி போன்ற பண்டிகை நேரத்தில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் திருவள்ளுவர் மைதானத்தில், நான்கு சக்கர வாகனங்களுக்கு தற்காலிக பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும். மேலும், கரூர் ஜவஹர் பஜார், பிரம்ம தீர்த்தம் ரோடு, எம்.எல்.ஏ., அலுவலகம் வரையிலான மக்கள் அதிகம் கூடும் முக்கிய வணிக வீதிகளில் தரைக்கடைகள் அமைக்க அனுமதிக்க கூடாது. அவ்வாறு அமைப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டி களும் பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். பல ஆண்டு களாக சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் செலுத்தி, வாடகை கொடுத்து தொழில் செய்யும் நிரந்தர வணிகர்களின் கடை வாசலை மறைத்து கடைகள் அமைக்கப்படுவதால், அவர்களது வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
கரூர் ஜவஹர் பஜார், கோவை ரோடு உள்ளிட்ட வணிகம் நிறைந்த பகுதிகளில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்வதால் வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படுவதால், அதற்கு அனுமதி வழங்க கூடாது. பெரிய நிறுவனங்கள் சார்பில் தரைக்கடைகள் மூலம் ஜி.எஸ்.டி., வரம்புக்குட்பட்ட பொருட்களை பில் இல்லாமல் விற்பனை செய்வதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், முறையாக ஜி.எஸ்.டி., செலுத்தும் நேர்மையான வணிகர்களும் பாதிக்கப்படுகின்றனர். தரைக்கடை வணிகர்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத மாற்று இடங்களை ஒதுக்கி, மாவட்ட நிர்வாகம் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement