லட்சியம் அடைய லட்சம்! வீடுகளில் சோலார் மின் உற்பத்திக்கு மானியம்

பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே வடமதுரையில் நடந்த பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்ட சிறப்பு முகாமில், பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தமிழகத்தில், வீட்டு மின் கட்டணத்தை குறைக்க, மத்திய அரசின் பிரதம மந்திரி சூர்யகர், அதாவது, பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டின் மொட்டை மாடியில் சூரிய மின்சார தகடுகளை பொருத்த மானியம் வழங்கப்படுகிறது. தற்போது மாநில அரசின் கூடுதல் மானியத்தையும் சேர்த்து, அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை மானியம் பெறும் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

திட்டத்தில், மத்திய அரசின் மானிய தொகையாக ஒரு கிலோ வாட் வரை 30 ஆயிரம், இரண்டு கிலோ வாட் வரை, 60 ஆயிரம் ரூபாய், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல், 78 ஆயிரம் ரூபாய், மாநில அரசின் மானிய தொகையாக ஒரு கிலோ வாட் வரை, 5,000 ரூபாய், இரண்டு கிலோ வாட் வரை, 10 ஆயிரம், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் 22 ஆயிரம் ரூபாய் மானிய தொகை பெறலாம்.

திட்டத்தில், வீட்டு மேற்கூரை சூரிய மின்தகடு அமைக்க, வங்கிகள் வாயிலாக உடனடியாக கடன் வழங்கப்படுகிறது. மானியம், நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற, 7 நாட்களில் இருந்து, 30 நாட்களுக்குள் செலுத்தப்படும். ஒரு கிலோ வாட் சூரிய தகடு, ஒரு நாளில் நான்கு முதல் ஐந்து யூனிட்டுகள் வரை மின் உற்பத்தி செய்யும். நுகர்வோர் செய்யும் முதலீடு குறுகிய காலத்தில் திரும்ப பெறலாம்.

துடியலுார் அருகே வடமதுரையில் உள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், கோவை மின் பகிர்மான வட்டம், வடக்கு அலுவலகத்தில், திட்ட சிறப்பு முகாம், சோலார் மின்சாரம் விழிப்புணர்வு மற்றும் சேவா சேது சிறப்பு முகாம் நடந்தது.

கோவை மின் பகிர்மான வட்ட, வடக்கு மேற்பார்வை இன்ஜினியர் குமார் கூறுகையில், ‘‘தகுதியான வீடுகளில், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் சூரிய பேனல்கள் அமைத்து, மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மொத்த மானிய தொகை, ஒரு லட்சம் ரூபாய் வரை பெறலாம். சூரிய பேனல்கள் அமைக்க வங்கிகள், கடன் உதவி வழங்குகின்றன. முகாமில், 100 பேர் வரை விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். வீடுகளுக்கு சூரிய மின்சார தகடுகள் பொருத்துவதால், மின் பற்றாக்குறை குறையும். சுற்றுச்சூழல் மேம்படும். தகுதி உடைய அனைவரும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்,’’ என்றார்.

செயற்பொறியாளர் சண்முகசுந்தரம், உதவி செயற்பொறியாளர்கள் திருமலைசாமி, பாலாஜி, முருகையன், மகேந்திரன், சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement