இதயத்திற்கு ஆரோக்கிய வாழ்க்கைமுறையை பின்பற்றுவது அவசியம்: டாக்டர் ஜவஹர் ப்ருக் அறிவுரை

உலகளவில் மனித உயிர்களுக்கு பெரும் சவாலாக இதய நோய் விளங்குகிறது. மாறுபட்ட வாழ்க்கை முறை, மரபணு சார்ந்த முன்கூட்டிய பாதிப்புகள் உள்ளிட்ட காரணங்களால் தற்போது இதய நோய் பெருகி வருகிறது.

இத்துறையில் சிறந்து விளங்கும் இதய நோய் நிபுணர் டாக்டர் மு.ஜவஹர் ப்ருக் 10,000 பேருக்கும் மேற்பட்ட தீவிர சிகிச்சைகளை செய்துள்ளார். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, பேஸ் மேக்கர், வால்வு சிகிச்சை, பிறவி இதய ஓட்டை அடைப்பு போன்ற இன்டர்வென்ஷனல் சிகிச்சைளை செய்து மருத்துவ இதயவியல் எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் சிறப்பு முனைவர் விருதும், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்திடம் கே.ஜி., சாதனையாளர் விருதும், கொரோனா வீரர் விருதும், பெற்றுள்ளார். இதய நோயில் இருந்து பாதுகாக்க அவர் கூறியதாவது:

சிறிய நெஞ்ச வலி, மூச்சுத் திணறல், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் நுட்பமாக தெரியும். அதைப் பலர் ஆரம்பத்தில் அஜீரணக் கோளாறு எனத் தவறாக புறிந்துக் கொள்கின்றனர். நெஞ்சில் அழுத்தம், மூச்சுத் திணறல் ஏற்பட்டால் உடனடியாக உள்ளூர் அவசர மருத்துவ சேவையை தொடர்பு கொள்ள வேண்டும். அறிகுறிகள் நீங்கும் வரை காத்திருக்க வேண்டாம்.

இதய நோயை தடுக்க சத்தான உணவு, உடற்பயிற்சி மேற்கொள்வதை அன்றாட பழக்கமாக பின்பற்ற வேண்டும். புகையிலை, மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். துாக்கத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இதயத்திற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் இதய நோய் ஏற்படும் அபாயம் குறையும் என்றார்.

Advertisement