பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதால் வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள், குளங்கள் துார்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மேலும், கிராம வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிய விரும்பும் திறன்சாரா தொழிலாளர்களுக்கு 125 நாட்கள் பணி வழங்கவும், ஊதியத் தொகை எவ்வித தடையுமின்றி, உரிய காலத்தில் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
பருவ மழைக் காலத்தில் குடியிருப்புகள், பள்ளி வளாகங்கள், சாலைகள், பாலங்களில் மழைநீர் தேங்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மணல் மூட்டைகள், சவுக்கு கழிகள், ஜெனரேட்டர்கள், டேங்கர் லாரி, ஜே.சி.பி., பொக்லைன், மரம் அறுக்கும் இயந்திரம் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல் நிவாரண முகாம்களாக பயன்படுத்தும் பள்ளிகளை ஆய்வு செய்து அங்கு குடிநீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஏரிகளின் கொள்ளவு, கரைகள், மதகுகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்து வளர்ச்சி பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், பி.டி.ஓ.,க்கள் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.