தோழி சாந்தியின் சதி வலையில் வீழ்ந்தேன் குற்றத்தை மறைக்க பல கோடிகளை இழந்தேன்: ‘கிரானைட்’ வீரமணி வாக்குமூலம்

சென்னை: ‘தோழி சாந்தியின் சதி வலையில் சிக்கியதுடன், குற்றத்தை மறைக்க, என்னை மிரட்டிய நபர்களிடம் பல கோடி ரூபாயை இழந்தேன்’ என, ‘கிரானைட்’ வீரமணி, 85, வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிறுமியரை பாலியல் வன்முறை செய்ததாக, ‘கிரானைட்’ வீரமணி மற்றும் இவரது குற்றத்திற்கு உடந்தையாக இருந்த தோழி சாந்தி, 61, உட்பட, ஏழு பேர் கைதாகி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வீரமணி மீது ஏழு வழக்குகள் உள்ளன.

நான்காவதாக நேற்று, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், வீரமணியை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

வீரமணி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:

எனக்கு இப்படியொரு சபலம் இருப்பதை அறிந்த என் தோழி சாந்தி, தன்னுடைய பணம் பறிக்கும் செயலுக்கு அதை பயன்படுத்திக் கொண்டார். சிறுமியருடன் நான் படுக்கையில் இருந்ததை ரகசியமாக வீடுயோ எடுத்து, மிரட்டியே பணம் பறித்தார். அவரது கணவரும் இதற்கு உடந்தையாக இருந்தார்.

சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்று பணம் தருமாறு, சாந்தி மிரட்டினார். நான் முடியாது என, மறுத்து விட்டேன். அதன்பின், என்னை பற்றிய ரகசிய தகவல்களை கசியவிடத் துவங்கினார். இதனால், பணம் கொடுக்க சம்மதம் தெரிவித்தபோது, பெரும் தொகை கேட்டார்.

இதனாலேயே, ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள நிலத்தை குறைந்த விலைக்கு விற்க நேரிட்டது. பணம் கொடுத்த பின்னும் சாந்தி மிரட்ட துவங்கினார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நபர் உட்பட அரசியல்வாதிகள் என, பலர் மிரட்ட துவங்கினர்.

இவர்களுக்கு சாந்தி பணம் வாங்கி கொடுத்தார். விவகாரம், போலீஸ் வரை சென்றது. போலீசார் என்னை நெருங்கியதால், நான் இப்படியொரு சிக்கலில் இருப்பதை, என் மகளிடம் தெரிவித்தேன்.

அவர் தான் ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி கண்ணையா மகன் பிரகாசை அறிமுகம் செய்து வைத்தார். குற்றத்தை மூடி மறைக்க, பிரகாஷ் வாயிலாக பல கோடிகளை கொடுத்து இழந்தேன்.

இவ்வாறு வீரமணி கூறியுள்ளதாக தெரிகிறது.

Advertisement