காளிங்கராயன் விவசாயிகள் போராட்டம் ஒத்திவைப்பு

ஈரோடு: காளிங்கராயன் வாய்க்காலில் பாசன நீர் கோரி நடக்கவிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் காளிங்கராயன்பாளையத்தில் இருந்து காளிங்கராயன் வாய்க்காலில் திறக்கப்படுகிறது. இதன் மூலம், 15,764 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

கடந்த ஜூன், 16ல் பாசன நீர் திறப்புக்கு பதில், அணையில் நீர் இருப்பு இல்லை எனக்கூறி, 15 நாட்கள் உயிர் நீர் மட்டும் திறக்கப்பட்டது. இதனால் பல கட்ட போராட்டம் நடத்திய நிலையில், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள், அரை நிர்வாண போராட்டத்தில் நேற்று ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இந்த போராட்டம் நடக்கவில்லை.

இதுபற்றி காளிங்கராயன் பாசன விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் சேதுராஜ் கூறியதாவது:

போராட்டம் குறித்து நீர் வளத்துறை அதிகாரிகள், போலீசார் பேசினர். மூத்த அமைச்சர்களிடமும் பேசியுள்ளோம். தற்போது பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும், மின் அணையில் இருந்து, 4 டி.எம்.சி., வரை நீரை பெற்று வழங்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாலும், போராட்டத்தை ஒத்திவைக்க கோரினர். மூன்று நாட்களில் அரசிடம் இருந்து நல்ல பதில் கூறுவதாக தெரிவித்ததால் போராட்டத்தை மூன்று நாட்களுக்கு ஒத்தி வைத்துள்ளோம்.

இவ்வாறு கூறினர்.

Advertisement