‘மாஜி’ அமைச்சர் மகனுக்கு எதிரான ‘நோட்டீஸ்’ நிறுத்தம்
சென்னை: தி.மு.க., முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் குமரனுக்கு எதிரான, ‘லுக் அவுட்’ நோட்டீசை நிறுத்தி வைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க., வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு, 2025 டிசம்பர், 14ல், திருவண்ணாமலையில் நடந்தது. மாநாட்டு திடலை சமன்படுத்த, அருகிலுள்ள மலப்பம்பாடி ஏரியில் இருந்து மண் எடுக்கப்பட்டது. இதன் வாயிலாக, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் அமைச்சர் வேலு, அவரது மகன் குமரன் மீது, லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.
இதில், குமரனுக்கு எதிராக, லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், குமரன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குமரன் தரப்பில், தான் சொந்தமாக மருத்துவமனை வைத்து உள்ளதால், சீனாவில் நடக்கும் கண்காட்சிக்கு சென்று சாதனங்கள் வாங்க வேண்டி உள்ளது என்றும், தன் மனைவியின் பாஸ்போர்ட்டை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, சீனா செல்ல அனுமதி அளிக்கும் வகையில், குமரனுக்கு எதிரான தேடுதல் நோட்டீசை, அக்., 20 நள்ளிரவு முதல், 29ம் தேதி வரை நிறுத்திவைத்து உத்தரவிட்டார்.