ஜவளகிரிக்கு இடம் பெயர்ந்த ஒற்றை யானை சாலையில் உலா வந்ததால் மக்கள் அச்சம்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, சாலையில் உலா வந்த ஒற்றை யானையால், கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வனச்சரகங்களில், 100க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. கர்நாடகா மாநில வனப்பகுதியான பன்னார்கட்டாவிலிருந்து, எந்த நேரத்திலும், 150க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர வாயப்புள்ளது. அதனால், எல்லை வனப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இச்சூழலில், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து நேற்று முன்தினம் காலை வெளியேறிய ஒற்றை யானை, முள்பிளாட், எலசெட்டி ஏரி வழியாக ஜவளகிரி வனப்பகுதி நோக்கி இடம் பெயர்ந்தது. குறிப்பிட்ட துாரத்திற்கு வனத்துறையினர் வேலி அமைத்திருந்ததால், நேராக வனப்பகுதிக்குள் யானையால் செல்ல முடியவில்லை.

அதனால், வேலி அருகே நீண்ட துாரத்திற்கு நடந்து வந்த ஒற்றை யானை, ஜவளகிரி – சூளகுண்டா சாலையில் உலா வந்தது. இதை பார்த்த தெருநாய்கள் கூட்டம், யானையை பார்த்து குரைத்ததால் ஆக்ரோஷமடைந்த யானை, நாய்களை விரட்டியது. அருகில் கட்டடங்களில் இருந்த பொதுமக்கள் கூச்சலிட்டதால், ஜவளகிரி வனப்பகுதிக்குள் யானை சென்று மறைந்தது.

யானை சாலையில் உலா வந்ததால், கிராம மக்கள் அச்சமடைந்தனர். ஜவளகிரியை ஒட்டியுள்ள கிராமங்களில், ராகி உள்ளிட்ட பயிர்களை யானைகள் கூட்டம் தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. அதனால் பேலாளம் அருகே, 6 கி.மீ., துாரத்திற்கு யானைகள் வெளியே வர முடியாத அளவிற்கு, இரும்பு வேலி அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement