42,000 குடியிருப்புகளை சீரமைக்க ரூ.100 கோடி நகர்ப்புற வாரியம் ஒதுக்கீடு
சென்னை: தமிழகம் முழுதும், 42,000 அடுக்குமாடி குடியிருப்புகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், 100 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
ஏழை மக்களுக்காக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இந்த குடியிருப்புகளை பராமரிக்கும் பொறுப்பு, வாரியத்திடமே உள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், ஒதுக்கீட்டாளர்கள் தங்களுக்குள் சங்கம் அமைத்து, பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதற்காக குறிப்பிட்ட அளவு நிதியும் கொடுக்கப்பட்டது.
இதன்படி, சங்கங்கள் பதிவு செய்யப்பட்டாலும், அவற்றின் செயல்பாடுகள் போதிய பலனை கொடுக்கவில்லை. இதனால், அடுக்குமாடி குடியிருப்புகளின் பராமரிப்பு கேள்விக்குறியானது.
அதேநேரத்தில் பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் பராமரிப்பு இல்லாததால், மின்சார பெட்டி, படிக்கட்டுகள், நடைபாதைகள், மேல் தளங்கள் சிதிலமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் வைத்து, வாரியம் நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது.
இது குறித்து, வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வாரிய திட்ட பகுதிகளில், 42,000 அடுக்குமாடி குடியிருப்புகள் பராமரிப்பு இன்றி பாதிக்கப்பட்டுள்ளன. இதை சரி செய்ய, நடப்பு நிதி ஆண்டில், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றார்.