தனியார் மயம் சர்ச்சை எதிரொலி நகராட்சி நிர்வாக பணிகள் நிறுத்தம்

சென்னை: நகராட்சி நிர்வாகத் துறையில் தனியார் மயம் என, தொடர் எதிர்ப்பு கிளம்புவதால், பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக நகராட்சி நிர்வாகத் துறையை, முதல்வர் விஜய், தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்.

விமர்சனம்





த.வெ.க., கூட்டணி ஆட்சி அமைந்த பின், சேலம் மாநகராட்சியில் குடிநீர் வழங்கும் திட்டம், மதுரை, நாகர்கோவில் மாநகராட்சிகளின் பாதாள சாக்கடை திட்டம், தஞ்சாவூர், துாத்துக்குடி மாநகராட்சிகளின் வணிக வளாகம் அமைக்கும் திட்டம் ஆகியவை, தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளன.

முதல்வர் விஜய், தன் துறை வாயிலாக தனியார் மயத்தை ஊக்குவிப்பதாக, கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்து வந்தன.

இந்நிலையில், தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளவிருந்த சில பணிகள், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், பல்வேறு பணிகளை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

அதேபோல், கோவை மாநகராட்சியில், 58 வார்டுகளுக்கான குடிநீர் வழங்கல் பணியை, தனியார் நிறுவனம் செய்து வருகிறது.

உயிரி வாயு





மீதமுள்ள, 42 வார்டு களுக்கான குடிநீர் வழங்கும் திட்டம், சென்னையில் உள்ள 22 கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையங்களில் இருந்து தரம் உயர்த்தப்பட்ட உயிரி வாயு தயாரிக்கும் பணி, திடக் கழிவுக்கான வாகன கொள்முதல் உள்ளிட்ட திட்டங்களையும், தனியார் வாயிலாக மேற்கொள் ள திட்டமிடப்பட்டது.

ஆனால், தற்போது தனியார் மயத்துக்கு எதிர்ப்பு அதிகமாக கிளம்பி இருப்பதால், அதற்கான திட்ட அறிக்கை கள் தயார் செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement