‘கூரியர்’ நிறுவனம் பெயர் மோசடி மக்களுக்கு எச்சரிக்கை அவசியம்

சென்னை: வீட்டிற்கு டெலிவரி செய்யும் கூரியர் நிறுவனங்களின் பெயரில், மக்களிடம், ‘சைபர்’ மோசடி நடப்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது:

‘புளூ டார்ட் கூரியர்’ நிறுவனத்தின் பிரதிநிதி எனக் கூறி, ஒருவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டார். டெலிவரி செய்ய வந்திருக்கும் ஊழியரால், வீட்டின் முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், சரியான இருப்பிடத்தை தெரிவிக்குமாறும் கேட்டார். தொடர்ந்து, டெலிவரி ஊழியருடன் பேசுவதற்காக, *21*7856918226# என்ற எண்ணுடன் எஸ்.எம்.எஸ்., அனுப்பினார்.

இதில், *21* குறியீடு, மொபைல் போன் அழைப்பை வேறு எண்ணுக்கு தானாக திருப்பி விடும், ‘கால் பார்வர்டிங்’ வசதியுடன் தொடர்புடையது. இதுபோன்ற குறியீடுகளை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள், ஓ.டி.பி., உள்ளிட்ட ரகசிய தகவல்களை பெற முயற்சிக்கலாம்.

எனவே, தெரியாத நபர்கள் அனுப்பும் இத்தகைய குறியீடுகளை சரிபார்க்காமல், மொபைல் போனில் ‘டயல்’ செய்ய வேண்டாம். இந்த மோசடியில் சிக்கி கொள்ளாமல், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement