இந்திய நிறுவனங்களின் ரகசிய தகவல்களை திருடிய ஏஐ ஏஜென்ட்: விசாரணையில் அம்பலம்

4

-நமது நிருபர்-

இந்தியாவின் இணையப் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக சி.இ.ஆர்.டி., செயல்படுகிறது.

தற்போது, ஏ.ஐ., எனப்படும, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடைபெறும் சைபர் தாக்குதல்கள் தொடர்பாக இந்த அமைப்பு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன் அறிக்கை:

* ஆய்வு மற்றும் மதிப்பீட்டுக்காகப் பயன்படுத்தப்பட்ட சில ஏ.ஐ., ஏஜென்ட்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி வரம்பை மீறி இந்திய நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை அணுகியுள்ளன.

* ஏ.ஐ., மாதிரிகளை உருவாக்கும் நிறுவனங்களிடமிருந்து இதுதொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. பாதிக்கப்பட்ட நிறுவனங்களால் இந்த அனுமதியற்ற அணுகலைத் தாங்களாகவே கண்டறிய முடியவில்லை.

* ஏ.ஐ., ஏஜென்ட்கள் இணைய பாதுகாப்பு குறைபாடுகளைப் பயன்படுத்தி, உள்நுழைந்து, இணைப்பை ஏற்படுத்தி தகவல்களைப் பெற்றுள்ளன.

* நம் நாட்டின் தனிநபர் தகவல்கள் மற்றும் நிறுவனங்களின் ரகசிய ஆவணங்கள் உள்ளிட்ட வணிகப் பதிவுகளைப் படித்துள்ளன. தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளுக்கான அனுமதி வரம்பையும் அவை மீறியுள்ளன.

* இதுதவிர, பொதுவெளியில் கிடைக்கும் இலவச ஏ.ஐ., கருவிகளைப் பயன்படுத்தி, பண ஆதாயத்துக்காக மோசடி நபர்கள் சைபர் தாக்குதல்களை நடத்தியதையும் கண்டறிந்துள்ளோம்.

* இந்த அபாயத்தைத் தடுக்க, ஏ.ஐ., உருவாக்கும் நிறுவனங்கள் நிகழ்நேரக் கண்காணிப்பையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும். நிறுவனங்கள் தங்களது உள்நுழைவுச் சான்றுகளைத் தணிக்கை செய்து மாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement