'மாயமான சிறுமி பற்றி தகவல் தந்தால் ரூ.2 லட்சம் சன்மானம்': விழுப்புரம் மாவட்ட த.வெ.க., அறிவிப்பு

2

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில், அக்., 11ம் தேதி இரவு பிறந்தநாள் கொண்டாடிவிட்டு, பெற்றோருடன் துாங்கிய, 7 வயது சிறுமி ஹேமலதா, மறுநாள் காலை மாயமானார்.

சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 120 போலீசார் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனாலும், இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், மயிலம் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சண்முகம், சிறுமியின் பெற்றோரை சந்தித்து நேற்று ஆறுதல் கூறினார்.

மேலும், த.வெ.க., பிரமுகர் சந்திரசேகர், சிறுமியின் தாயை சந்தித்தார். அப்போது, அமைச்சர் ஆனந்த் மொபைல் போன் மூலம், சிறுமியின் தாயிடம் பேசினார்.

இதற்கிடையே, 'சிறுமி குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு, 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, த.வெ.க., வடமேற்கு மாவட்ட செயலர் குணசரவணன் அறிவித்துள்ளார்.

மாயமாகி ஐந்து நாட்களை கடந்தும் சிறுமி குறித்த தகவல் கிடைக்காதது, போலீசாருக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது.




செஞ்சி அருகே சிறுமி மாயமான விவகாரத்தில் திடீர் திருப்பமாக தஞ்சாவூரை சேர்ந்த சாமியார் சரவணன் மற்றும் அவரது மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி ஹேமலதா காணாமல் போன சம்பவத்தில், சிறுமியின் வீட்டருகே உள்ள சிவன் கோவிலில் தங்கி இருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சரவணன் என்கிற சாமியார் திடீரென காணாமல் போனதால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வந்துள்ளது.

இதையடுத்து அவரது மொபைல் எண்ணை ட்ரேஸ் செய்த போலீசார் நேற்று மாலை 6:00 மணியளவில் சரவணன் விழுப்புரம் அடுத்த அரசூர் பகுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சரவணன், அவரது மனைவியை பிடித்து விசாரனைக்காக இரவு 8.30 மணியளவில் சத்தியமங்கலம் காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement