மலை கிராம கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு மக்களுக்கு இலவச கண் கண்ணாடி

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த பெட்டமுகிலாளம் மலை கிராமத்தில், மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில், ஐம்பெரும் விழா நேற்று நடந்தது.
கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட சுகாதார அலுவலர் ஜெகநாதன் தலைமை வகித்து விழாவை துவக்கி வைத்ததுடன், 124 பேருக்கு இலவச கண் கண்ணாடி, 60 காச நோயாளிகளுக்கு, 1,200 ரூபாய் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம், மலை கிராம பள்ளி மாணவ, மாணவியர், 37 பேருக்கு பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்.
தொடர்ந்து, 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மேலும், பெட்டமுகிலாளம் பஞ்.,க்கு உட்பட்ட அனைத்து மலை கிராம மக்களுக்கும், காசநோய் பரிசோதனை செய்யும் நோக்கில், 15 நாட்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம் துவங்கப்பட்டது.
இப்பணி, மைலான் என்ற தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. மலை கிராம மக்களுக்கு இலவச கண் கண்ணாடி, கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு ஆகியவை நடத்த உதவி செய்த, கெத்தள்ளியை சேர்ந்த அம்ரீஷ் என்பவர் கவுரவிக்கப்பட்டார். டாக்டர்கள் அஜய், சபரிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement