த.வெ.க., கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ., விசாரணை தொடங்கி ஓராண்டு நிறைவு

கரூர்:கரூரில் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில், 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப்., 27ல், த.வெ.க., பிரசார கூட்டம் நடந்தது. அதில் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். கடந்தாண்டு அக்., 13ல், கரூர் த.வெ.க., கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை, சி.பி. ஐ.,க்கு மாற்றி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சி.பி.ஐ., எஸ்.பி., பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் கடந்தாண்டு அக்., 17 முதல் விசாரித்து வருகின்றனர்.
நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், மின் துறை அமைச்சர் நிர்மல் குமார், பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலாளர் மதியழகன், அப்போதைய கரூர் கலெக்டர் தங்க வேல், எஸ்.பி., ஜோஷ் தங்கையா, ஏ.டி.எஸ்.பி., பிரேம் ஆனந்த், கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோரிடம் விசாரணை நடந்துள்ளது. மேலும் கடந்தாண்டு ஜன., 12,19 மற்றும் மார்ச்., 19ல் முதல்வர் விஜய், புதுடெல்லி சி.பி.ஐ., அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு,
விசாரணை நடந்தது.
இதையடுத்து கடந்தாண்டு நவ., 13ல் கரூர் ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் நடந்த த.வெ.க., பிரசார கூட்டம் தொடர்பான வழக்கு, திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ., விசாரணை தொடங்கி இன்றுடன், ஓராண்டு நிறைவு பெறுகிறது. ஆனால், வழக்கு தொடர்பாக, குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ., அதிகாரிகள் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.

Advertisement