கடலைச் செடிகளை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்: விவசாயிகள் கவலை

காரியாபட்டி: காரியாபட்டி கழுவனச்சேரியில் கடலைச் செடிகளை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

காரியாபட்டி கழுவனச்சேரி, சித்து மூன்றடைப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் கடலை, மிளகாய் பயிரிட்டுள்ளனர். ஓரளவிற்கு வளர்ந்து காய் பிடிக்கும் பருவத்தில் உள்ளன. களையெடுத்து, உரமிட்டு பலன் கொடுக்கும் நேரத்தில் காட்டுப்பன்றிகள் கடலை செடிகளை சேதப்படுத்தி வருகிறது. தனியாக சென்றால் ஆட்களை தாக்கும் அளவிற்கு பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. ஆட்களுக்கும், பயிர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. பன்றிகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

ராம்பாண்டி, விவசாயி கூறியதாவது.

சீமை கருவேல மரங்கள் வளர்ந்து தரிசாக கிடந்த காடுகளை சுத்தப்படுத்தி கடலை, மிளகாய், பருத்தி பயிரிட்டோம். நன்கு விளைந்து பலன் கொடுக்கும் நேரத்தில் காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து சேதப்படுத்தி வருகின்றன. தோப்பூர் கண்மாய் பகுதியில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து புதர் மண்டி கிடப்பதால் அங்கு இனப்பெருக்கம் செய்து நிரந்தர வசிப்பிடமாக மாற்றி வருகிறது. இரவு நேரங்களில் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள விளை நிலங்களில் புகுந்து கடலை, மிளகாய் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சேதப்படுத்தி முற்றிலும் அழித்து வருகின்றன. தோப்பூர் கண்மாயில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றினால் ஓரளவிற்கு பன்றிகளை கட்டுப்படுத்த முடியும் . தற்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

Advertisement