கோவில் வழிபாட்டு முறைகளை அறியாத செயல் அலுவலரை தக்காராக நியமிக்க கூடாது; அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

12

சென்னை: கோவிலின் சடங்குகள், வழக்கங்கள் குறித்து முழுமையாக அறியாத செயல் அலுவலர்களை, 'தக்கார்' ஆக நியமனம் செய்வதை, ஹிந்து சமய அறநிலையத் துறை தவிர்க்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலுார் மாவட்டம், கொட்டியால் இருங்கையூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பரம்பரை அறங்காவலரான ஆர்.தமிழரசு முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக, தொடர் புகார்கள் வந்தன.

இதையடுத்து, மாரியம்மன் கோவில் நிர்வாக பணிகளை கவனித்து கொள்ள, செயல் அலுவலரை தக்காராக நியமித்து, ஜூலை 10ல் ஹிந்து அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, தமிழரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவு:

தக்கார் பதவி என்பது, வெறும் சம்பிரதாயம் அல்ல. ஏனெனில், அவர் கோவிலின் அறங்காவலர் அல்லது தர்மகர்த்தா பொறுப்பை ஏற்கிறார். செயல் அலுவலரை, தக்காராக நியமிப்பது சரி அல்ல என்பதை, பல வழக்குகளில் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

ஒரு கோவிலின் வழிபாட்டு முறைகள், சடங்குகள் மற்றும் நடைமுறைகள் குறித்து, அவர் நன்கு அறிந்திருக்க வாய்ப்பில்லை. அத்தகைய நபர் பாரம்பரிய முறைப்படி, ஆன்மிக விஷயங்களை நடத்தாதபோது, காலப்போக்கில் கோவிலின் வழிபாட்டு முறைகள், வழக்கங்கள், சடங்குகள் மற்றும் நடைமுறைகள் படிப்படியாக மறைந்து விடும்.

இது, இறுதியில் கோவில் தன் அடையாளத்தையே இழக்க வழிவகுக்கும். எனவே, சம்பந்தப்பட்ட கோவிலின் ஆன்மிக விவகாரங்களில், நல்ல ஞானம் உள்ளவராகவும், கோவில் காரியங்களை கவனித்துக் கொள்ள, அதிக நேரத்தை ஒதுக்குபவராகவும் இருக்கும் ஒருவரை, தக்காராக நியமிக்க வேண்டும்.

ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் படி, கோவிலின் நிதி விவகாரங்களை நிர்வகிக்கவே, முக்கியமாக செயல் அலுவலர் நியமிக்கப்படுகிறாரே தவிர, அவர் மத விவகாரங்களை கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவது இல்லை; அதற்குரிய தகுதியையும், அவர் கொண்டிருக்க மாட்டார்.

இதை கருத்தில் கொண்டிருந்தால், அறநிலையத் துறை இணை ஆணையர், ஏற்கனவே உள்ள அறங்காவலர்களில் ஒருவரை, சம்பந்தப்பட்ட கோவிலின் தக்காராக நியமித்திருப்பார்.

எனவே, அறங்காவலர்கள் நியமிக்கப்படும் வரை, கோவிலின் ஆன்மிக விஷயங்களில் அறிவும், அனுபவமும் கொண்ட உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை, தக்காராக தேர்ந்தெடுக்க வேண்டும்.

அத்தகைய நபர்கள் யாரும் இல்லாதபட்சத்தில், தற்காலிகமாக செயல் அலுவலரை தக்காராக நியமிக்கலாம். தகுதியுள்ள உள்ளூர் மக்களும், தக்கார் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களின் விண்ணப்பத்தை, அதிகாரிகள் பரிசீலித்து நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement