டிரம்ப் எச்சரிக்கையை மீறி ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை தாக்கிய உக்ரைன்

1

-நமது நிருபர்-

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, துருக்கி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் முயன்று வருகின்றன. கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டே, ரஷ்யா இந்த போரை நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. டிரம்ப் எச்சரிக்கையை மீறி ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை உக்ரைன் தாக்குதல் நடத்தியது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கடுமையாக சாடி, டிரம்ப் வெளியிட்ட பதிவு:


ரஷ்யா குறித்த எனது முடிவு மிகவும் எளிமையானது. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான போரில் அமைதியை ஏற்படுத்த நான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். சற்று முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது; ரஷ்யாவில் உள்ள டீசல் சுத்திகரிப்பு நிலையங்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குறிவைத்துத் தாக்குகிறார். அமெரிக்கா உட்பட உலகளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது அவருக்குத் தெரியும்.

விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் அனைத்து வகையான வணிகங்களும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும், ரஷ்யா உலக நாடுகளுக்கு மலிவு விலையில் டீசலை வழங்கி வருகிறது. ஜெலன்ஸ்கிக்கு இதைப் பற்றிக் கவலையில்லை. வெளிப்படையாகச் சொன்னால், ஐரோப்பா அவருக்கு வாரி வழங்கும் உதவிகளும், கடந்த காலத்தில் நேர்மையற்ற ஜோ பைடன் அவருக்கு வழங்கிய பணத்தாலும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்பவில்லை.

ஒருபோதும் விரும்பியிருக்கவும் மாட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, இப்போது அவரது நாடு சிதைந்து போயுள்ளது, நிலப்பரப்பில் பெரும் பகுதியை இழந்துவிட்டார், கடல் மற்றும் பெருங்கடல் பகுதிகளும் கைநழுவிவிட்டன. அவரது நாட்டு ஆண்களில் பலர் காயமடைந்துள்ளனர்; ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர். இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement