ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் குறைகளை தீர்க்க வேண்டும்: எதிர்கட்சித் தலைவர் நாஜிம் வலியுறுத்தல்

புதுச்சேரி: ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் குறைகளை தீர்க்க, புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்கட்சித் தலைவர் நாஜிம் வலியுறுத்தி உள்ளார்.

அவர், கூறியதாவது;

மாநிலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான சலுகைகள், திட்டங்கள் நடைமுறைப்படுத்தபடாமல் உள்ளது. மத்திய அரசு திட்டத்தின் படி, ஓய்வூதியரின் பணத்தில் இருந்து ஒரு தொகை பிடித்தம் செய்து, அவரது குடும்பத்தில் ஒரு இழப்பு நேரிடும் போது, 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்குவது மற்ற பகுதியில் இருந்து வருகிறது.

புதுச்சேரியிலும் இத்திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என முதல்வரிடம் தெரிவித்தோம். ஆனால், அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

முதல்வர், கேபினட் கூட்டத்தில் முடிவு செய்து அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். புதுச்சேரியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு எப்.எம்.ஏ., திட்டத்தின் கீழ் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் சூழல் உள்ளது.

தற்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள சி.ஜெ.ஹேச்.எஸ்., திட்டத்தின் அடிப்படையில், சி.ஜெ.ஹேச்.எஸ்., வெல்னஸ் சென்டர் இருக்கும் பகுதியில் 5 கி.மீ.,க்குள் வசிக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு எப்.எம்.ஏ., கிடையாது என தெரிவித்துள்ளது.

எங்கெல்லாம் வெல்னஸ் சென்டர் இல்லையோ, அந்த பகுதியில் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு எப்.எம்.ஏ., திட்டத்தை செயல்படுத்திட வேண்டும்.

கலெக்டர் அல்லது அரசு செயலர் தலைமையில் கமிட்டி அமைத்து ஓய்வூதியர்களின் குறைகள் கேட்க வேண்டும். காரைக்கால், மாகே, ஏனாம் பகுதியில் உள்ள அரசு ஊழியர்களின் சர்வீஸ் புக், அந்தந்த பிராந்தியங்களில் ஒப்படைக்கப்பட வேண்டும்’ என்றார்.

Advertisement