பாதிரியாரின் ரூ.56 லட்சம் நிலையான வைப்பு நிதி சொசைட்டிக்கு சொந்தம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரை: கத்தோலிக்க திருச்சபையில் பாதிரியாராக இணைந்தவர்கள் தங்கள் குடும்ப உறவுகளை துறந்து, உலக இன்பங்களை விடுத்து சபையின் விதிகளுக்கு உட்பட்டு வாழ வேண்டும் என்றும், அவர்கள் மறைவுக்குப் பின் ஈட்டும் சொத்துகள் மற்றும் சேமிப்புகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட மத சொசைட்டிக்கு மட்டுமே சொந்தம் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை எஸ்.பி.ஐ., வங்கியில் ரோமன் கத்தோலிக்க பாதிரியார் தேவக்குமார் அருளானந்தம் பெயரில் ரூ.56 லட்சம் மதிப்பிலான 6 நிலையான வைப்பு நிதிகள் இருந்தன. கடந்த 2018 பிப்., 24ல் அவர் காலமானார். பாதிரியாரின் சகோதரர்கள் தெய்வநாயகம், ஜோசப், சகோதரியின் மகள் மேரி ஜமீலா ஆகியோர் தாங்கள் தான் சட்டப்பூர்வ வாரிசுகள் எனக்கூறி, கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வாரிசு சான்றிதழ் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இதற்கிடையில், மறைந்த பாதிரியார் ‘தி ஏ.பி.வி.எம்., சொசைட்டி ஆப் தி கத்தோலிக் அப்போஸ்டலேட்’ அமைப்பை சேர்ந்தவர் என்பதால், அந்த தொகை தங்களுக்கு சொந்தம் என சொசைட்டியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த அந்நீதிமன்றம், வாரிசுதாரர்களுக்கு ஆதரவாக 2024 செப்., 18ல் உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சொசைட்டி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.

அவர்கள் பிறப்பித்த உத்தரவு: ஒருவர் துறவறம் பூண்டு பாதிரியாராக மாறுவது நடைமுறையில் ‘சிவில் மரணம்’ போன்றது. அவர் தனது சொந்த குடும்ப உறவுகளை துறந்து, முழுமையாக மதச்சபையின் சேவைக்காக தன்னை அர்ப்பணிக்கிறார்.

பாதிரியாராக மாறிய பின்பு அவர் ஈட்டும் சொத்துகள் மற்றும் சேமிப்புகள் அனைத்தும் அவரது தனிப்பட்ட குடும்பத்திற்கு சொந்தமானவை அல்ல. அவை சபையின் நலனுக்கே உரியவை. இயேசுவின் போதனைகள், கானன் சட்டங்களின்படி, துறவறம் பூண்ட ஒருவரின் சொத்துகள் மதச்சபையின் சொத்தாகவே கருதப்பட வேண்டும். குடும்ப வாரிசுகள் இதற்கு உரிமை கோருவது மதக் கோட்பாடுகளுக்கும் சட்ட நெறிமுறைகளுக்கும் எதிரானது.

எனவே கீழமை நீதிமன்றம் வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ரூ.56 லட்சம் நிலையான வைப்புத் தொகையை ஏ.பி.வி.எம்., சொசைட்டி பெற்றுக் கொள்ள முழு உரிமை உண்டு. ஏற்கனவே வாரிசுதாரர்கள் அப்பணத்தை வங்கியிலிருந்து பெற்றிருந்தால், அதனை ஒரு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட சொசைட்டியிடம் திருப்பித் தர வேண்டும். தவறும் பட்சத்தில் அந்த தொகைக்கு 9 சதவீத வட்டி சேர்த்து செலுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.

Advertisement