விஜய் அ.தி.மு.க.,வை கைப்பற்ற நினைக்கிறார்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
ரெட்டியார்சத்திரம்: ‘அ.தி.மு.க.,வை கைப்பற்ற விஜய் நினைக்கிறார்’ என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டினார்.
ஆத்துார் தொகுதி அ.தி.மு.க., சார்பில் கட்சியின் 55வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர்கள் தெற்கு ஆரோக்கியசாமி, மேற்கு நல்லமுத்து, வடக்கு ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாநில பொருளாளர், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:
தற்போது சோதனையான காலகட்டத்தில் அ.தி.மு.க., கடந்து செல்கிறது. இக்கட்சியை வெல்லவோ, வீழ்த்தவோ யாருக்கும் சக்தி இல்லை. 75வது ஆண்டு கொண்டாடும் தி.மு.க., 25 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தது. கடந்த 55 ஆண்டுகளில் 31 ஆண்டுகளாக ஆட்சி செய்த பெரும் கட்சியாக அ.தி.மு.க., உள்ளது.
தேர்தலின் போது 10 லட்சம் கோடி கடன் உள்ளது என்பதை விஜய் அறிவார். விஜய் அளித்த 381 ஏமாற்று வாக்குறுதிகளால் ஆட்சியை பிடித்துள்ளனர். தன்னந்தனியே 45 ஆயிரம் ஓட்டுகள் பெற்ற அ.தி.மு.க.,வை வீழ்த்தி அழித்து விட விஜய் நினைக்கிறார். ஒருபோதும் நிச்சயமாக நடக்காது.
தேர்தல் ஆணையம், சுப்ரீம் கோர்ட் அ.தி.மு.க.,வும், இரட்டை இலை சின்னமும் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே என வலியுறுத்தின. கட்சியும், நமது குழந்தைகளும் நமக்கு சொந்தம். நமது குழந்தைகளுக்கு வெறொரு தந்தை பெயரை வைத்து கொள்ள அனுமதிக்க முடியாது. அ.தி.மு.க.,விற்கு தலைவராகி கட்சியை கைப்பற்ற விஜய் நினைக்கிறார்.
தாராபுரம் இடைத்தேர்தலில், த.வெ.க.,விற்கு ஓட்டு இல்லை என்பது அரசு ஊழியர்களின் அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. புதிதாய் நடிகர்கள் சிலர் கட்சி துவங்குகின்றனர். எல்லோரும் முதல்வராக ஆசைப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ஜெயசீலன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., தேன்மொழி, இளைஞரணி ஒன்றிய செயலாளர் கணேஷ் பிரபு, ஒன்றிய செயலாளர்கள் சின்னச்சாமி, மயில்சாமி, கோபி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகன், எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் சுப்ரமணி, மாவட்ட வர்த்தக அணி நிர்வாகி கிரஷர் பாலு முன்னிலை வகித்தனர்.