மதுரை மாநகராட்சியை சூழ்ந்த'ஆக்டோபஸ்' ஆக்கிரமிப்புகள்: கோவையை பாருங்க அதிகாரிகளே

மதுரை: மதுரை என்றாலே முக்கிய பகுதிகளில் நடைபாதைகளை 'ஆக்டோபஸ்' கரங்ககளாக சிலர் ஆக்கிரமித்து மக்களுக்கு இம்சை கொடுப்பது; வாரச் சந்தை என்ற பெயரில் தெருக்களில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்தை முடக்கிப் போடுவது போன்ற விதிமீறல்கள் தான் நினைவுக்கு வருகின்றன.

நேற்று முன்தினம் 'பாதசாரிகள் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்களே தர்ணாவில் ஈடுபடுவோம்' என டில்லி வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் அதிகாரிகளை நீதிபதி எச்சரித்துள்ளார். ஒரே வகை பிரச்னைக்கு ஒரு நீதிமன்றத்தின் கருத்து பொதுவானதாகும்.

அந்த வகையில் போக்குவரத்து மேலாண்மை மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பு குறித்த நீதிமன்றத்தின் கருத்தைப் பற்றி மதுரை அதிகாரிகள் கவலைப்படுவதாக தெரியவில்லை. நகரில் 100 வார்டுகளிலும் மாநகராட்சி, மாநில, தேசிய நெடுஞ்சாலை ரோடுகள் உள்ளன.

இந்த ரோடுகளில் தேவை அடிப்படையில் ஆவின், டான் டீ, மீன் வளர்ப்பு என அரசு துறைகளின் கடைகள் செயல்படுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஆனால் லோக்கல் அரசியல் பின்னணியில் 'தடுக்கி விழுந்தா பெட்டிக் கடைகள், எட்டு வச்சா பழம், காய்கறி, குளிர்பான கடைகள், ரோட்டின் இருபுறமும் பாஸ்ட் புட் கடைகள் என அனுமதியின்றி ஆர்ப்பரிக்கின்றன.

குறிப்பாக பழங்காநத்தம் பைபாஸ் ரோடு ஆக்கிரமிப்பின் கோரப்பிடியில் திணறுவதால் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். பழங்காநத்தம் - காளவாசல் சந்திப்பு வரையான 2 கி.மீ., தொலைவுக்குள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அனுமதி இன்றி செயல்படுகின்றன. இக்கடைகள் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு 'கப்பம்' கட்டுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் 'நமக்கு ஏன் வம்பு' என கண்டுகொள்வதில்லை.

இதுதவிர பைபாஸ் ரோட்டில் திரும்பிய பக்கமெல்லாம் பிளக்ஸ் பேனர்களை, விளம்பர போர்டுகளை இஷ்டத்திற்கும் வைத்து விளம்பரம் தேடுகின்றனர். இதுபோன்ற விதிமீறல்களை 'களை'யெடுக்க அதிகாரிகளுக்கு காலமும் இல்லை, கவலையுமில்லை.

மாநகராட்சி பின்பற்றுமா





கோவை மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கின்றனர். வாரச் சந்தை நடக்கும் பகுதியில், அப்பகுதி கடை வியாபாரம் பாதிக்கக் கூடாது என்பதற்காக, ஒருவாரம் ரோட்டின் இடதுபுறம் சந்தை செயல்பட்டால் அடுத்தவாரம் வலதுபுறம் செயல்படுவது என்ற நடைமுறையை பின்பற்றுகின்றனர். மதுரையிலும் இதனைப் பின்பற்றினால் அனுமதி பெற்று, முறையாக வரிசெலுத்தும் கடை உரிமையாளர்கள் கொஞ்சமாவது ஆறுதல் பெறுவர். மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா.

Advertisement