கொரியரில் வந்த 2.7 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்: வடமாநில தொழிலாளி கைது

3

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளி கூரியர் மூலமாக பெற்ற 2.7 கிலோ கஞ்சா சாக்லேட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு கூரியரில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவில் டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் மணியன் தலைமையிலான போலீசார் வாகரை கிராமத்தில் இயங்கி வரும் தனியார் ஸ்பின்னிங் மில்லில் சோதனை செய்தனர்.

அங்கு டெய்லராக பணியாற்றி வரும் டெல்லியை சேர்ந்த முகமது சாஜித்திடம் 22, சோதனை நடத்தியதில் 2.7 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், 'ஹெர்பல்ஸ்' பெயரில் ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்து கஞ்சா சாக்லேட்டுகளை கூரியரில் பெற்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் முகமது சாஜித்தை கைது செய்தனர்.

Advertisement