அரிசி பற்றாக்குறைக்கு வாய்ப்பே இல்லை: ஆலை உரிமையாளர் சங்க நிர்வாகி பேட்டி

திருப்பூர்: ‘‘தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை,’’ என, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்க துணைத் தலைவர் துரைசாமி கூறியதாவது:

ஆண்டு முழுவதும் அரிசிக்கான தேவை சீராக உள்ளது. மழையின்மையால் நெல் விளைச்சல் குறைந்து, விலை உயர்ந்துள்ளது. தற்போது சன்னரக நெல்லை கிலோ ரூ.58-க்கு கொள்முதல் செய்கிறோம். அரிசி ஆலைகளுக்கான மின் கட்டணமும் அதிகரித்துள்ளதால், அரிசி விலை உயர்ந்துள்ளது.

அரிசியை பதுக்கி வைத்திருப்பதாகவும், தட்டுப்பாடு ஏற்படும் என்றும், விலை மேலும் உயரும் என்றும் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம். நெல் மூட்டைகளை ஓராண்டு வரை வைத்திருக்க முடியும். ஆனால், அரிசியை மூன்று மாதங்கள் மட்டுமே இருப்பு வைக்க முடியும்.

ஆலைகளில் 2 லட்சம் டன், மொத்த வியாபாரிகளிடம் 2 லட்சம் டன், சில்லரை வியாபாரிகளிடம் 1 லட்சம் டன் என 5 லட்சம் டன் அரிசி இருப்பு உள்ளது. பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. மழை பெய்து நெல் விளைச்சல் அதிகரித்தால் அரிசி விலையும் குறைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement