பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

கரூர்:பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெல், மக்காச்சோளம் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என, கரூர் கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிரப்பதாவது:
கரூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சிறப்பு பருவத்தில் நெல்-, மக்காச்சோளம் பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம். நெல் பயிருக்கு காப்பீடு பிரீமியம் ஒரு ஏக்கருக்கு, 589.50 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கான பிரீமியம் செலுத்த கடைசி நாள் நவ., 16ம் தேதியாகும். மக்காச்சோளம்- பயிருக்கு காப்பீடு பிரீமியம், 499.50 ரூபாய்-, டிச.,2க்குள் செலுத்த வேண்டும்.
எதிர்பாராமல் ஏற்படும் எல்நினோ போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் மகசூல் இழப்பு உள்ளிட்ட, பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு, பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு பிரீமியம் செலுத்தலாம்,
இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், சிட்டா மற்றும் வி.ஏ.ஓ., வழங்கும் இ.அடங்கல் அல்லது அடங்கல், ஆதார் எண் இணைக்கப்பட்ட மற்றும் இ.கே.ஒய்.சி., பூர்த்தி செய்த வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, பிரீமியம் தொகையை செலுத்திய பின், அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம். இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement