திருப்புவனத்தில் டூவீலர்களில் பறக்கும் சிறுவர்களால் விபத்து அதிகரிப்பு

திருப்புவனம்:

திருப்புவனத்தில் டூவீலர்களில் அதி வேகத்தில் பறக்கும் சிறுவர், சிறுமியர்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

தமிழகத்தில் டூவீலர், கார் உள்ளிட்டவைகளை இயக்க குறைந்தபட்ச வயது 18 ஆகும்,

18 வயது பூர்த்தியடையாதவர்கள் வாகனங்களை இயக்க அனுமதியில்லை. மீறி இயக்கினால் வாகன ஓட்டும் சிறுவர்கள், வாகனம் வழங்கி உதவியவர்கள், பெற்றோர்கள், வாகன உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 18 வயது பூர்த்தியடையாதவர்கள் வாகனங்களை இயக்கி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் வாகனங்கள் சேதமடைந்தால் இழப்பீடும் கிடைக்காது. திருப்புவனத்தில் தினமும் சிறுவர், சிறுமியர்கள் பலரும் டூவீலர்களில் அதிவேகத்தில் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பறக்கின்றனர். பெற்றோர்களும் கடைகளுக்கு சென்று வர, உறவினர்களை பஸ் ஸ்டாப்களில் இறக்கி விட சிறுவர், சிறுமியர்களிடம் டூவீலர்களை கொடுத்து அனுப்புகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் சிறுவர், சிறுமியர்கள் பலரும் நண்பர்களுடன் டூ வீலர்களில் அதிவேகத்தில் பறக்கின்றனர். சாலைவிதிகளை கடைபிடிக்காமல் டூவீலர் இயக்குவதால் மற்றவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த 16ம் தேதி திருப்புவனம் போஸ்ட் ஆபிஸ் முன் சிறுவர்கள் ஒட்டி வந்த டூவீலர் எதிரே வந்த போலீசாரின் டூவீலர் மீது மோதியதில் போலீஸ்காரர் தலையில் காயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் லைசென்ஸ் பெறாமல் பெண்கள் பலரும் டூவீலர்களில் வலம் வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் குழந்தைகளை பள்ளிக்கு டூவிலர்களில் அழைத்து செல்வது, காய்கறி வாங்க , ஒரே டூவீலரில் 3 முதல் 5 குழந்தைகளை அழைத்து செல்வது என விதி மீறி ஓட்டுகின்றனர். திருப்புவனத்திற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வருவதே கிடையாது. போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவியர்கள் தவிக்கின்றனர். நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாவட்ட காவல் துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக தொலை தூர பஸ்கள் திருப்புவனம் பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது, சிறுவர்கள் டூவீலர்களை இயக்கும் போது விரட்டி பிடிக்க முடியவில்லை. மீறி பிடிக்க முயன்று விபத்து ஏற்பட்டால் போலீசார் மீதுதான் புகார் வைக்கின்றனர். பெற்றோர்கள் மனது வைத்தால் தான் இதனை தடுக்க முடியும், என்றனர்.

Advertisement