கார் மோதி ஊராட்சி செயலர் மனைவி பலி; மகள் படுகாயம்

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரோட்டோரம் நின்றிருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதியது. இதில் ஊராட்சி செயலர் செந்தில்வேல் 55, அவரது மனைவி மதிவதனி 45, பலியாகினர். மகள் ஹரிணி 16, படுகாயமடைந்தார்.

கோட்டையூர் ஊராட்சி செயலர் செந்தில்வேல். இவரது உறவினர் வீட்டு காதணி விழாவை செந்துறை ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்தனர்.

இதற்காக செந்தில்வேல், அவரது மனைவி மதிவதனி, மகள் ஹரிணி ஆகிய மூவரும் நேற்று முன்தினம் இரவே மண்டபத்திற்கு சென்று ஏற்பாடுகளை கவனித்தனர். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக ரோட்டோரம் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது சிங்கம்புணரியை சேர்ந்த சேவுகப்பெருமாள் 38, ஓட்டி வந்த சொகுசு கார் இவர்கள் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்டு செந்தில்வேல், மதிவதனி சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஹரிணி படுகாயம் அடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிக்க முயன்ற சேவுகப்பெருமாள், அவருடன் காரில் வந்த நண்பர்கள் மசூத் 25, முகமது அசரப் 29, சேவுகமூர்த்தி 29, ஆகிய நால்வரையும் செந்தில்குமாரின் உறவினர்கள் மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனால் படுகாயம் அடைந்த அவர்களை நத்தம் போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவர்கள் நால்வரும் நத்தம் குட்டுப்பட்டியில் உள்ள அய்யனார் அருவிக்கு சென்று திரும்பியபோது விபத்து நடந்தது தெரிந்தது. சேவுகப்பெருமாளை போலீசார் கைது செய்தனர்.

Advertisement