சமூக நீதித்துறை பெயர் மாற்றம் கூடாது எஸ்.சி., - எஸ்.டி., அலுவலர்கள் கோரிக்கை

நாகப்பட்டினம்: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்ற பெயரை, சமூக நீதித்துறை என பெயர் மாற்றம் செய்ததை திரும்ப பெற வேண்டும் என, தமிழ்நாடு அரசு, எஸ்.சி.,- எஸ்.டி., அலுவலர் நல சங்கம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை எஸ்.சி.,- எஸ்.டி., பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகையில், தமிழ்நாடு அரசு, எஸ்.சி.,- எஸ்.டி., அலுவலர் நல சங்கம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை எஸ்.சி.,- எஸ்.டி., பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம், மாநில பொது செயலாளர் திலகர் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயரை சமூக நீதித்துறை என பெயர் மாற்றம் செய்ததை திரும்ப பெற வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஊர்கள், சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள பெயரில் இருக்கும் ஜாதி பெயரை நீக்க வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறை, தலைமை அலுவலகத்தில் நேர்முக உதவியாளர்களாக பணி புரிந்து ஓய்வு பெற்ற இரண்டு நபர்கள், தற்போதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

உள்ளாட்சி துறையில் மிக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் கணினி இயக்குனர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு பணி வரன்முறை, போதிய அளவில் ஊதிய உயர்வு, பிரதி மாதம் 5 ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement